சிறைக்கைதிகள் மீதான தாக்குதல்: அடுத்தகட்ட நடவடிக்கை தயார்!
அம்பாந்தோட்டை – அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான அறிக்கை இன்று (திங்கட்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 22ஆம் திகதி கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான காணொளி வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரளவினால் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டன.
குறித்த குழுக்கள் அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலைக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தன.
அவற்றில் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனியவால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையே இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இரண்டாவது அறிக்கையை எதிர்வரும் 25ஆம் திகதி சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளை பொலிஸார் துரத்தி துரத்தி தாக்கி, அவர்களை முழந்தாளில் செல்லுமாறு பணிக்கும் வகையிலான காணொளி வைரலாகியுள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை நடத்தியிருந்ததோடு, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தியது. எனினும், இவ்விடயத்தில் நீதி நிலைநாட்டப்படவில்லையென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
இதேவேளை, இவ்விடயத்தை எதிர்வரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாக சிறைக்கைதிகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.