நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை!
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களைக்கொண்ட நிபுணர்கள் குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட 280 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சிதரும் தகவல்களையடுத்து இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது.
தொழில்சார் நிபுணர்கள் அமைப்புகள், பொதுநலன் குழுக்கள் மற்றும் சர்வதேச வாணிபத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் எதிர்ப்பு தீவிரமடைந்திருப்பதால், இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மீளாய்வு அல்லது ரத்துச் செய்யும்வரை அதை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டிருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினால் டாக்டர்கள், பொறியியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் உட்பட பல தொழில்சார் நிபுணர்கள் பாதிக்கப்படுவர் என்று கூறி 8 மனுதாரர்கள் அரசியலமைப்பின் கீழ் அதன் செல்லுபடித்தன்மை குறித்து பிரச்சினை கிளப்பி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொாடுத்திருக்கும் ஒரு தருணத்தில் அதை இடைநிறுத்தம் செய்யுமாறு பணிப்புரை ஜனாதிபதியிடமிருந்து வந்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் ஒரு தடவை விசாரணைக்கு எடுக்கப்பட்டு பின்னொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் வழக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் பிரதம பேச்சாளரான கே.ஜே.வீரசிங்க உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி பதவி விலகினார்.
இதையடுத்து அபிவிருத்தி தந்திரோபாயங்கள், சர்வதேச வாணிப அமைச்சுக்கு இதுவிடயத்தில் பிரச்சினைகள் அதிகரித்தன.
சகல முனைகளில் இருந்தும் குறிப்பாக ஜனாதிபதி மட்டத்திலிருந்து நெருக்குதல்கள் அதிகரித்ததை அடுத்து நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அவதானிப்புகளையும் விதந்துரைப்புகளையும் சர்வதேச வாணிபத்துறை நிபுணர்கள் குழுவொன்று நுணுகி ஆராய்ந்து வருகின்றது என்று அமைச்சு வட்டாரங்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றன.
அறிக்கையில் காணப்படுகின்ற பாதகமான அவதானிப்புகளுக்கு மாற்று யோசனைகளை அமைச்சு சமர்ப்பிக்கும்.
அந்த யோசனைகள் இவ்வாரம் பகிரங்கப்படுத்தப்படும் என்று கூறிய வட்டாரங்கள் உடன்படிக்கையை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி விடுத்ததாகக்கூறப்படுகின்ற எந்தவொரு பணிப்புரை தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தெரவித்தன.
சிங்கப்பூருடனான உடன்படிக்கையொன்று தொடர்பில் இலங்கையின் கருத்துக்கோணத்தில் இருந்து நடைமுறைச்சாத்தியத் தன்மை மற்றும் செலவு – பலாபலன் குறித்த ஆய்வு எதுவுமே செய்யப்படாமல் பேச்சுவார்த்தைச் செயன்முறைகள் முழுவதும் முன்னெடுக்கப்பட்டிருந்தது என்று நிபுணர்கள் குழு கருத்துவெளியிட்டிருக்கின்றது.
அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவினால் உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கான நடைமுறைகளைத் துரிதப்படுத்துவதற்காக வேண்டமென்றோ அல்லது அறியாப்பிரகாரமோ சில பாரதூரமான தவறுகள் இடம்பெற அனுமதிக்கப்பட்டுவிட்டது என்றும் உடன்படிக்கையை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை நிபந்தனைகளுடன் கூடிய அங்கீகாரத்தையே வழங்கியிருந்தது.
அதில் அமைச்சரவை குறித்துரைத்த நிபந்தனைகளை கவனத்திற்கெடுக்காமல் அமைச்சர் நடந்துகொண்டார் என்றும் நிபுணர்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.