பிரித்தானிய நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கவிற்கு பிடியாணை!

பிரித்தானிய நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கவிற்கு பிடியாணை!

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இராணுவத்தின் 59 ஆவது படையணியின் முன்னாள் முக்கிய தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பெர்னான்டோ, பிரித்தானிய தலைநகர் லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு எதிரில் வைத்து புலம்பெயர் தமிழர்களின் கழுத்தைஅறுப்பதாக சைகைமூலம் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இலங்கையின் 70 ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி லண்டனிலுள்ள உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட போது, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து லண்டன் தூதரகத்தின்முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னான்டோ மீது 2018 ஆம் ஆண்டுபெப்ரவரி 6 ஆம் திகதி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று பிரித்தானிய தலைநகர் லண்டனிலுள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் முன்னிலையாகுமாறு பிரிகேடியர் பெர்னாந்துவின் இலங்கையிலுள்ள இல்லத்திற்கும், லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கும் அழைப்பாணைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தபோதிலும், பிரிகேடியர் பெர்னான்டோவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இருந்தோ எவரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.

பல்லிய குருகே வினோத் பிரியந்த பெரேரா, கோகுலகிருஷ்ணன்நாராயணசாமி, மயூரன் சதாநந்தன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த இந்த வழக்கை விசாரித்த வெஸ்ட் மினிஸ்டர் நீதவான், பிரிகேடியர்பிரியந்த பெர்னாந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தி அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்திருப்பதாகவும் தனது தீர்ப்பில்அறிவித்திருக்கின்றார்.

இந்நிலையில் இச் சம்பவத்திற்காக பிணை அற்ற பிடியாணை வழங்குவதாகவும் லண்டன் வெஸ்ஸ்ட்மினஸ்டர் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்ப்பை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net