மஹிந்தவின் ஆதரவுடன் அரசியலமைப்பை கொண்டுவருவது அவசியம்!
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரின் ஆதரவுடனேயே புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண்டுமென மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சில கருத்துக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன என்றும் கூறியுள்ளார்.
கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்-
”புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண்டுமென்றால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசாங்கம் வந்த பின்னரே அதனை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது தேர்தல் நெருங்கும் இந்தக் காலத்தில், அவசர அவசரமாக இதனைக் கொண்டுவருவதானது, அனைத்துத் தரப்பினருக்கும் பிரச்சினையாகவே இருக்கிறது.
எமது நாட்டை பொறுத்தவரை யாரும் நல்லது செய்ய வேண்டுமென நினைப்பதில்லை. சிறந்த திட்டமொன்றைக் கொண்டுவந்தால்கூட அதனை எதிர்ப்பதே வழக்கமாக இருக்கின்றது.
இதனாலேயே அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர வேண்டுமென நாம் கோரி வருகிறோம்.
நாடாளுமன்றிலுள்ள அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துக்கொண்டு இந்த செயற்றிட்டத்தை மேற்கொண்டால் மட்டுமே இதில் வெற்றியடைய முடியும்.
மறுபுறத்தில், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் வெளியிடும் கருத்துக்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதையும் கூறியே ஆகவேண்டும். தமது அனுமதியின்றி அரசாங்கத்துக்கோ அமைச்சரவைக்கோ செயற்பட முடியாது என அவர்கள் கூறிவருகிறார்கள். இதுகூட அரசாங்கத்துக்கான அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.
இவற்றை விடுத்து, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரையும் இணைத்துக்கொண்டு, மகாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதத்துடன் புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லாமல் உள்ளது” என்றார்.