எலும்புக்கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளன

எலும்புக்கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளன

மன்னார் மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த மாதிரிகள் நாளை (புதன்கிழமை) கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று காலை 134 ஆவது நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

“குறித்த எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்கு அனுப்புவது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் நீதவான் மற்றும் விசாரனைக்குழு அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்றது.

இந்தநிலையில் நாளை காலை மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மன்னார் நீதிமன்றத்திலிருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படவுள்ளது.

குறித்த மாதிரிகள், கொழும்பு விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் புலோரிடவிற்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 300 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 23 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 7537 Mukadu · All rights reserved · designed by Speed IT net