ஜெனீவாவிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்பதே அரசின் ஒரே குறிக்கோள்!
தமிழர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல மாறாக, ஜெனீவா பிரச்சினையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளென வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வாரமொரு கேள்விக்கு பதிலளித்துவரும் அவர்,
பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்கும், ஏக்கிய இராஜ்ய பதம்கொண்ட புதிய அரசியல் அமைப்பின் வரைவு குறித்து இந்த வாரம் பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பைத் திருத்துவதற்கு முக்கிய காரணம் தமிழ் மக்களின் பலவருட கால எதிர்பாரப்புக்களை நிறைவேற்றுவதே என்பது எமது எண்ணமாகக் காணப்படுகின்றது.
ஆனால் அரசாங்கத்திற்கு இவ்வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் தமிழர் சம்பந்தமாக நாம் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் என ஜெனீவாவில் எடுத்துக்காட்டி, மேலும் தவணை பெற வேண்டிய கட்டாயமுள்ளது. அதற்காகவே அவர்கள் முயற்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
எமது எதிர்பார்ப்புக்களைப் பூரத்தி செய்வது அவர்களின் நோக்கமல்ல என்றும், ஜெனீவா பிரச்சினையிலிருந்து தப்பிக்கவேண்டும் என்பதே அவர்களின் அதியுச்ச குறிக்கோளாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் தீர்ப்பது அரசாங்கத்தின் நோக்காக இருந்திருந்தால், தொடக்கத்திலேயே தமிழ் மக்கள் ஏன் பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்க முன்வரவில்லை, ஏன் வடக்கு கிழக்கு இணைப்பைக் கோருகின்றனர், ஏன் சமஷ்டி முறையே சிறந்தது என கூறுகின்றனர் என்பதை அலசி ஆராய்ந்திருப்பார்கள்.
ஆனால், அது அவர்களின் நோக்கமன்று. சிங்கள ஏகாதிபத்தியத்தைக் கைப்பற்றி தமிழ் மக்களைத் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க என்ன செய்யலாம் என்பதே அவர்களின் குறிக்கோள் என்பதோடு, புதிய அரசியல் யாப்பு அதற்கான கண்துடைப்பு என்றும், அதில் தேர்தல் பற்றிய வேறு விடயங்கள் குறித்து வருவது தமிழர்களுக்கு நாம் எதுவும் கொடுக்க இவ்வரைவைக் கொண்டுவரவில்லை என சிங்கள மக்களுக்கு கூறுவதற்காகவே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.