மாகாண சபைத் தேர்தலை நடத்தாதிருப்பதே ஐ.தே.க.வின் தந்திரம்!

மாகாண சபைத் தேர்தலை நடத்தாதிருப்பதே ஐ.தே.க.வின் தந்திரம்!

மாகாண சபைத் தேர்தலை நடத்தாதிருக்கும் தந்திரச் செயலிலேயே ஐக்கிய தேசிய கட்சி ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”ஜனாதிபதி தேர்தலே தற்போது அவசியமானது என்றும் அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியினர் புதிய உபதேசமொன்றை செய்து வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கும், பொதுத் தேர்தலுக்குமான காலம் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடையும் போது அம்மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தற்போது பல மாகாணங்களின் ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ளதுடன், பல மாகாணங்களுக்கான தேர்தல் சுமார் இரண்டு வருடங்களாக நடத்தப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

நான்கு வருடங்கள் பூர்த்தியானவுடன் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதாயின் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரிலேயே நடத்தப்பட வேண்டும்.

ஆனால், ஐந்தாண்டுகள் பூர்த்தியின் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது கட்டாயமானது என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. அதற்கமைய இவ்வருட இறுதியில் நடத்தப்பட வேண்டும்.

எனவே, இது குறித்து எவரும் குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. மாகாண சபைக்கான தேர்தலே தற்போது அவசியமாகவுள்ளது. ஆனால், இதனை தாமதப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மாகாண சபைத் தேர்தலை நடத்தாதிருப்பதே ஐ.தே.க.வின் தந்திரமாக அமைந்துள்ளது.

இது ஜனநாயகத்தின் மீதான பாரிய தாக்குதல். ஜனநாயகத்தை பாதுகாப்பதாக மாபெரும் பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த ஐ.தே.க. தற்போது அதற்கு எதிராக செயற்பட்டு வருகிறது.

எனவே இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்று தீர்வை பெறுமாறு தேர்தல் ஆணையத்தை கோரியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net