வவுனியாவில் வியாபாரிகள் வீதியை மறித்து போராட்டம்!

வவுனியாவில் வியாபாரிகள் வீதியை மறித்து போராட்டம்!

வவுனியா, சந்தை சுற்று வட்ட வீதியில் வியாபாரிகள் வீதியை மறித்து வாகனங்களை செல்லவிடாது தடுத்து நிறுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் அப்பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதுடன் ஹொரவப்பொத்தான வீதியுடனான போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டுள்ளது நிலையில் இதனால் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

குறித்த பகுதியில் நடைபாதையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மரக்கறி மொத்த வியாபாரிகள் வியாபாரம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வியாபாரிகளுடன் தினச்சந்தையில் வியாபாரம் மேற்கொள்ளும் சிறு வியாபாரிகளும் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இன்று காலை முயற்சித்துள்ளனர்.

இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் நகரசபையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு சென்ற நகரசபை உத்தியோகத்தர்கள் இரு பகுதியினரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன், பொது நடைபாதையில் வீதியை மறித்து மரக்கறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிறுவியாபாரிகள் தமது எதிர்ப்பினை தெரிவிக்கும் முகமாக வீதியை மறித்து வாகனங்கள் பயணிக்க முடியாதபடி படுத்துக் கொண்டுள்ளனர்.

இதையடுத்து நகரசபை உத்தியோகத்தர்களின் பணிக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுமார் ஒன்றரை மணி நேரத்தின் பின்னர் நகரசபை உத்தியோகத்தர்கள் பொலிஸாரின் உதவியுடன் நடைபாதையிலிருந்த மரக்கறிகளை தமது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர்.

இதன்போது நகரசபை உத்தியோகத்தர்களுடன் சிறுவியாபாரிகள் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் நகரசபை வாகனத்தில் சுமார் 10இற்கும் மேற்பட்டவர்கள் ஏறி பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தினை அடைந்தவுடன் நகரசபை வாகனத்தில் சென்ற அனைவரும் கீழ் இறங்கி தப்பி ஓடிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து கைப்பற்றப்பட்ட மரக்கறிகள் நகரசபையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அப்பொருட்களை உரியவர்கள் வந்து பெற்றுக்கொள்ளுமாறு நகரசபை உத்தியோகத்தர்கள் நடைபாதை வியாபாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்போது வியாபாரிகள் தமது பொருட்களை எடுத்துச் சென்ற இடத்திற்குக்கொண்டு வந்து தருமாறு கோரி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது குறித்த சந்தைசுற்றுவட்ட வீதிக்கு பொலிஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 5375 Mukadu · All rights reserved · designed by Speed IT net