அரசியல் கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பாக டக்ளஸ் ஏன் கேள்வி எழுப்பவில்லை!
தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, டக்ளஸ் தேவானந்தா 1994 ஆம் ஆண்டு அரசாங்கத்திடம், ஏன் கேள்வி எழுப்பவில்லையென நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்தோடு, அங்குனுகொலபெலஸ்ஸ விவகாரம் தொடர்பில் இரண்டு ஆணைக்குழுக்களினுாடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில், இன்று (புதன்கிழமை)உரையாற்றிய ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற விசாரணைக்கு என்ன நடந்தது என கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“அங்குனுகொலபெலஸ்ஸ, சிறைச்சாலையில் கடந்த வருடம் தான் அந்தத் தாக்குல் சம்பவம் இடம்பெற்றது.
அதாவது, இலங்கையில் அரசியல் நெருக்கடி இடம்பெற்ற தருணத்தில்தான் அது இடம்பெற்றது. நவம்பர் மாதம் 22 ஆம் திகதி அரசாங்கம் ஒன்று இருக்கவில்லை.
இதுதொடர்பில் எமக்கு தெரியவந்தவுடன் இரண்டு ஆணைக்குழுக்களை ஸ்தாபித்துள்ளோம். தற்போது ஒரு ஆணைக்குழுவின் அறிக்கை வந்துள்ளது. அடுத்த அறிக்கையும் வந்தவுடன் நாம் தெரியப்படுத்துவோம்.
ஆனால், டல்லஸ் தேவானந்தா 1983 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.
எவ்வாறாயினும் அதற்குப் பின்னர் 1994 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.
அப்போதே இந்த விசாரணைகளை முன்னெடுத்திருக்கலாம் என்பதையும் அவருக்கு நாம் நினைவுபடுத்த வேண்டும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.