எதிர்காலத்தில் சிறந்த அடைவுகளை அடைய தமிழ் மக்களுக்கு சிக்கல் ஏற்படும்!
தமிழர்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளுக்காக தமது சக்தியை வீணாக்கினால் எதிர்காலத்தில் சிறந்த அடைவுகளை அடைய முடியாத நிலையேற்படுமென மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
“இளைஞர்கள் சமூகத்தினை பொறுப்பேற்கும் காலம் வருகின்றபோதுதான் புதிய முன்னேற்றம் ஏற்படும்.
இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளானவர்கள். மேலும் சமூக ஒற்றுமையின்மை, குறுகிய நோக்கங்கள் ஆகியவைகள் காரணமாகவே இன்னும் தமிழ் சமூகம் பின்தங்கிய நிலையில் உள்ளது.
ஆகையால் தமிழ் சமூகத்தை சிறந்த முறையில் கட்டியெழுப்ப கல்வி கற்ற இளைஞர்களாயே முடியும்.
அந்தவகையில் ஒரு சமூகம் வாழவேண்டுமானால் கல்வி, பொருளாதாரம், அரசியல், கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள், வாழ்வியல் முறைகள், அந்த இனத்தின் மொழி, அதன் வாழ்விடம் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தவேண்டும்” என உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.