சில தீய சக்திகளே என் மீது அபாண்டங்களை சுமத்துகின்றனர்!

சில தீய சக்திகளே என் மீது அபாண்டங்களை சுமத்துகின்றனர்!

கிழக்கு மாகாணத்தின் கல்வியை சீர்குலைக்கும் நோக்குடன் செயற்படுகின்ற சில தீய சக்திகளே என் மீது அபாண்டங்களை சுமத்தி, என்னை மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியில் இருந்து துரத்த எத்தனிக்கின்றன என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார்.

தன் மீது பரப்பப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவருடன் தொலைபேசி மூலம் கேட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணத்தின் கல்விப் பின்னடைவுக்கு ஹபாயாவும் ஒரு காரணம் என்று நான் தெரிவித்ததாக சிலர் பொய்களைப் புணைந்து முகநூல்களில் பரப்பி வருகின்றனர்.

எந்தவொரு இடத்திலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் ஹபாயா தொடர்பில் மாற்றுக் கருத்துக்களை தெரிவிக்கவில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை. எனது பிள்ளைகளும் ஹபாயா அணிகின்றனர். அதனால் அவர்களது கல்வி பாதிக்கப்படவில்லை.

நானும் ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் எமது இஸ்லாமிய மார்க்கத்திற்குட்பட்ட எமது பெண்களின் கலாசார ஆடையான ஹபாயாவை நான் ஏன் எதிர்க்க வேண்டும். அதனால் எனக்கு என்ன இலாபம் கிடைத்து விடப்போகிறது.

இதையும் மீறி ஹபாயாவுக்கு எதிராக கருத்து சொன்னால் அது எமது சமூகத்தில் எவ்வாறான அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது எனக்கு தெரியாமலா உள்ளது எனவும் அவர் என்னிடம் கேள்வியாக கேட்டார்.

இதேவேளை திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் கற்பித்த முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வரக்கூடாது என்று அந்த பாடசாலை சமூகம் மேற்கொண்ட தீர்வு காணும் பொருட்டு சில முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலை சண்முகா ஒரு தேசிய பாடசாலை என்பதனால் அதன் நிர்வாக விடயங்களில் தலையீடு செய்கின்ற அதிகாரம் மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு கிடையாது.

மத்திய கல்வி அமைச்சினால் விடுக்கப்படுகின்ற பணிப்புரைகளை நடைமுறைப்படுத்துவது மாத்திரமே எமக்குள்ள கடமையாகும். அந்த அடிப்படையில்தான் சண்முகா பாடசாலையின் முஸ்லிம் ஆசிரியைகளின் விடயம் கையாளப்பட்டது.

கடந்த பல வருடங்களாக எமது கிழக்கு மாகாணமானது கல்வியில் இலங்கையில் ஒன்பது மாகாணங்களுள் ஒன்பதாவது நிலையிலேயே இருந்து வருகின்றது.

இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு நான் பாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். இதற்காக என்னை அர்ப்பணித்துள்ளேன்.

எனது திட்டம் வெற்றி பெற்று கிழக்கு மாகாணம் கல்வியில் முன்னேறினால் அது சிலருக்கு பொறுக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய சிலரே என் மீது அபாண்டங்களை சுமத்தி, என்னை பதவியில் இருந்து துரத்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, எனக்கெதிரான சூழ்ச்சிகளை நன்கு திட்டமிட்டு வெற்றிகரமாக அமுல்நடத்தி வருகின்றனர்.

நான் உண்மைக்கும் நேர்மைக்கும் தலைசாய்க்கின்ற ஒருவன் என்ற ரீதியில் நீதி, தர்மம், யதார்த்தம் என்பவற்றையெல்லாம் குழிதோண்டிப் புதைக்கின்ற இவர்களது பாமரத்தனமான செயற்பாடு கண்டு மனவேதனையடைகின்றேன்.

ஆகையினால் இதன் பின்னால் உள்ள சூட்சுமத்தை எல்லோரும் புரிந்து கொண்டு, எமது கிழக்கின் கல்வியை முன்னேற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க முன்வர வேண்டும் என அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்” என்று மாகாணக் கல்விப் பணிப்பாளர் மன்சூர் வேண்டுகோள் விடுக்கின்றார்.

Copyright © 9229 Mukadu · All rights reserved · designed by Speed IT net