பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் போராட்டம்
ஆயிரம் ரூபாய் அடிப்படை நாளாந்த சம்பளத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை தொழில்நுட்ப வர்த்தக மற்றும் பொது தொழிலாளர் சங்கம், இலங்கை வங்கிசேவை சங்கம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், இலங்கை தோட்ட சேவை சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் ஏற்பாட்டில் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
குறித்த போராட்டங்கள், கேகாலை, பதுளை, அப்புத்தளை, எட்டம்பிட்டிய, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மாத்தளை, ஹட்டன், மத்துகம, மட்டக்களப்பு, தலவாக்கலை, ராகல,நுவரெலியா, தெல்தோட்டை, இரத்தினபுரி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.
இதேவேளை ருகுணு ஜயவர்த்தனபுர, தென்கிழக்கு, சப்ரகமுவ, கிழக்கு ரஜரட, களனி, வடமேல் மற்றும் பேராதனைப் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு முன்னாலும் போராட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
‘ஆயிரம் இயக்கம்’ என்ற பெயரில் இப்போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.