அமெரிக்காவிடம் இலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு கோரிய சிவாஜிலிங்கம்!

அமெரிக்காவிடம் இலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு கோரிய சிவாஜிலிங்கம்!

தென்னிலங்கையில் நடந்த அரசியல் குழப்பத்தை சாட்டாக வைத்துக் கொண்டு எங்களுக்கு அடிப்பார்கள் என்ற அச்சமுமிருந்தது.

தமிழ்மக்களின் கடைகளை கொளுத்தி அடித்தார்களாயின் என்ன செய்வது? இதனால் தான் நான் அமெரிக்காவிடம் உடனடியாக சமாதானப் படையை இலங்கைக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்தேன் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

“ஒக்ரோபர்-26 இல் நிகழ்ந்த அரசியல் மாற்றமும் அதன் பின்னரான எதிர்பார்ப்புக்களும்” எனும் தலைப்பிலான விசேட கருத்தரங்கு நிகழ்வு திங்கட்கிழமை(21) யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நல்லூர் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஒக்ரோபர் மாதம்-26 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பங்களின் பின்னர் இந்தியத் தொலைக்காட்சியொன்று இதுதொடர்பாக உங்கள் கருத்து என்ன என வினாவியது.

பல அரசியல்வாதிகள் கருத்துக்கள் சொல்ல முன்வருகின்றார்கள் இல்லை எனவும் குறித்த தொலைக்காட்சி சேவையினர் ஆதங்கம் வெளியிட்டிருந்தனர். ஆனால், நான் உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கெதிராக அவநம்பிக்கைப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்திருந்தேன்.

அல்லது ஜனாதிபதி நாடாளுமன்றத்தை முடக்கும் அல்லது கலைக்கும் கூத்தை மேற்கொள்வார் எனத் தெரிவித்திருந்தேன்.

நாடாளுமன்றம் முடக்கப்படலாம் என நான் தெரிவித்ததற்கமைய 27 ஆம் திகதி நண்பகல் வரை நாடாளுமன்றம் முடக்கப்பட்டது.

பின்னர் போகிற போக்கைப் பார்த்தால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கூடக் கலைப்பார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் தெரிவித்திருந்தேன்.

அவர்கள் நான் கூறிய விடயத்தைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு நடந்த பின்னர் அவர்கள் நான் கூறியதை நினைத்து ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.

இதன் பின்னர் எங்களுடைய கட்சி மற்றும் அங்கத்துவக் கட்சிகள் ஒன்றுகூடி மகிந்த ராஜபக்சவுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதென முடிவெடுத்தோம். இந்தத் தீர்மானம் மூன்று நான்கு தடவைகள் எடுக்க வேண்டியிருந்தது.

கடந்த-2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது நான் என்னுடைய வாக்கை மைத்திரிபால சிறிசேனவுக்கு அளிக்கவில்லை.

ஏனெனில், இவர் ஏமாற்றுவார் என்பது எனக்குத் தெரியும். தமிழ்மக்களை ஏமாற்றிய கடைசித் தலைவராக மைத்திரிபால சிறிசேனவே இருக்க வேண்டும்.

ஆகவே,இனியும் நாங்கள் சிங்கள ஆட்சியாளர்களை நம்பிப் பயனில்லை. இலங்கையில் இன வெறி முத்திப் போச்சுது எனவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

Copyright © 7478 Mukadu · All rights reserved · designed by Speed IT net