காங்கிரஸின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம்!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் (புதன்கிழமை) வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி தேர்தல் காலங்களில் மாத்திரம் ஒரு சில பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
ஆனால் இதுவரை அவர் கட்சியில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்காமல் இருந்த நிலையில் அவர், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய, உத்தரபிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சியின் பணிகளை பிரியங்கா காந்தி கவனிப்பாரென அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று உத்தரபிரதேச மேற்கு மாநில பொதுச்செயலாளராக ஜோதிராதித்யா சிந்தியாவும் அரியானா மாநிலத்தின் பொதுச்செயலாளராக மாநிலங்களவை உறுப்பினர் குலாம்நபி ஆசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பிரியங்கா காந்திக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.