சுதந்திர தினமா? தேசிய தினமா? ஊடகவியலாளரின் கேள்வியால் சர்ச்சை
ஊடகவியலாளரின் கேள்வியால் செய்தியாளர் மாநாட்டில் சர்ச்சை
சுதந்திர தினமா? தேசிய தினமா என்பது தொடர்பில் நேற்று கொழும்பில் அமைச்சர் வஜிர அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பெரும் சர்ச்சையொன்று ஏற்பட்டது.
இம்முறை சுதந்திர தின விழா தொடர்பான ஆவணங்கள், அறிவிப்புகளில் தேசிய தின விழா என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுதந்திர தின விழாவென்பது இல்லாதொழிக்கப்பட்டமைக்கு விசேட காரணங்கள் உள்ளனவாவென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து இச்சர்ச்சை ஆரம்பமானது.
அடுத்தடுத்து இரண்டு மூன்று ஊடகவியலாளர்களால் இது தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்ட போது, அமைச்சர் வஜிர அபேவர்தன இதற்குப் பதிலளித்தார்.
தேசிய தினமா சுதந்திர தினமாக என்பதில் மக்களுக்கு பிரச்சினையில்லை. சிலவேளை ஊடகங்களுக்கே இது பிரச்சினையாகியுள்ளது. தேசிய தினம் எனும் போது அதன் பொருளில் எந்த மாறுபாடும் கிடையாது.
இலங்கையின் அரசியலமைப்பிலும் தேசிய தினம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கிணங்கவே இம்முறை சகல அறிவிப்புகளிலும் தேசிய தினம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதையடுத்து கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் ஒருவர் புதிய அரசியலமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் அதற்கிணங்க சுதந்திர தினம் தேசிய தினமாக்கப்பட்டுள்ளதா? அவ்வாறென்றால் இனி சுதந்திர தினமென்ற சொல் உபயோகிக்கப்படாதா? என்றும் கேள்வி யெழுப்பியதுடன் ஏன் எமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லையா? என்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு பதிலளித்த அமைச்சர், இலங்கையிலேயே தேசிய தினத்திற்கு அரசியலமைப்பில் முக்கியத்துவமளித்து அதில் நிரந்தரமாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்தியா, மலேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அவ்வாறு அது அரசியலமைப்பில் உட்படுத்தப்படவில்லை. இந்த வகையில் இலங்கையே அதற்கு கௌரவமளித்துள்ளது.
ஜே.ஆர். ஜயவர்த்தன கொண்டுவந்த அரசியலமைப்பில் தேசிய தினம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் போது குறுக்கிட்ட ஊடகவியலாளரொருவர் ஜே.ஆர். கொண்டுவந்த அரசியலமைப்பு இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகின்றதா? அவ்வாறானால் இத்தனை வருடமும் சுதந்திர தினமென கொண்டாடிவிட்டு இப்போது அதனை தேசிய தினமாக்கியதின் காரணமென்ன? என்றும் வினவினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், அரசியலமைப்புக்கிணங்கவே தேசிய தினம் என்ற பெயரில் இந்நிகழ்வு கொண்டாடப்படுகின்றது.
இதிலுள்ள இத்தகைய சொற்பிரயோகங்கள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. அதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது என்றும் பதிலளித்து சர்ச்சைக்கு அமைச்சர் முற்றுப்புள்ளி வைத்தார்.