தொடரும் குளிரான காலநிலை – மக்கள் பாதிப்பு
நாட்டில் நிலவிவரும் குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் இறுதியாக வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவான மழைவீழ்ச்சிக்கான சாத்தியம் காணப்படுவதாகவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்றும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடும் குளிர் காரணமாக காலை வேலைகளில் பாடசாலை மற்றும் தொழிலுக்கு செல்பவர்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.