மீண்டுமொரு விபரீதத்திற்கு வித்திடாதீர்கள்!

மீண்டுமொரு விபரீதத்திற்கு வித்திடாதீர்கள்!

”இந்த நாட்டில் ஜனநாயக ரீதியாக போராடுகிறவர்களுக்கு வழங்கப்பட்ட பதில், இம்சை ரீதியாகவே முன்னெடுக்கப்பட்டது. தற்போது மலையக மக்களின் உரிமைகளையும் மறுத்து மீண்டுமொரு விபரீதத்திற்கு வித்திடாதீர்கள்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சம்பள பிரச்சினை தொடர்பாக, நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) மக்கள் விடுதலை முன்னணி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை கொண்டுவந்தது.

குறித்த பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே ஸ்ரீநேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதிகார வர்க்கம் தமது பாதுகாப்பிற்காக இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் என பேசிக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றது.

ஆனால் மலையக மக்கள் இன்னும் அந்நியர்கள் காலத்தில் கட்டப்பட்ட லயன் அறைகளில் வாழ்கின்றனர் என சிறிநேசன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாட்டிற்காக உழைக்கும் மக்களின் உரிமையை உதாசீனப்படுத்துவதை எந்த ரீதியிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென சிறிநேசன் மேலும் தெரிவித்தார்.

கம்பனிகள் மிகையான லாபத்தை உழைப்பதற்காக, உழைப்பின் பெரும் பகுதியை சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அமக்களின் சம்பளத்தை அதிகாரிப்பதற்கு காலத்தை இழுத்தடிப்பது அநியாயமான செயல் என சிறிநேசன் மேலும் தெரிவித்தார்.

இந்த நாட்டில் சட்டம், நீதி என சகல விடயங்களும் சகல மக்களுக்கும் பொதுவானது என்றால், மலையக மக்கள் கோரும் நியாயமான சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென சிறிநேசன் வலியுறுத்தினார்.

தொழிலாளர் வர்க்கம் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பிரித்தாளும் தந்திரத்தை பயன்படுத்தி அவர்களை பின்னடைய செய்வது பொருத்தமற்ற ஒன்று எனக் குறிப்பிட்ட சிறிநேசன், தர்மமான விடயங்களை தடுத்து நிறுத்துவது சமூகத்தின் எதிர்கால வளர்ச்சியை தடுக்கும் செயற்பாடென மேலும் தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஜனநாயக ரீதியாக போராடுகிறவர்களுக்கு வழங்கப்பட்ட பதில், இம்சை ரீதியாகவே முன்னெடுக்கப்படுகிறது.

அதுவே ஆயுத போராட்டத்திற்கும் வித்திட்டது என்பதை மறக்க வேண்டாமென சிறிநேசன் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், பிற்காலத்தில் இந்த போராட்டங்கள் வலுப்பெற வாய்ப்புண்டு என குறிப்பிட்ட சிறிநேசன், விபரீதங்கள் ஏற்பட்ட பின்னர் தண்டனை கொடுப்பதை விட விபரீதங்கள் ஏற்படாமல் தடுப்பது அவசியமென வலியுறுத்தினார்.

Copyright © 3131 Mukadu · All rights reserved · designed by Speed IT net