முழு நாட்டையும் பொருளாதார வலயமாக்குவதே இலக்கு!
அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கம் முன்னெடுப்பு
கொழும்பு பெருநகரத்தை இந்து சமுத்திரத்தின் கேந்திர ஸ்தானமாக மாற்றியமைப்பதே எமது இலக்கு. அதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கான முழுப்பொறுப்பும் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவணக்கவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
சவால்களுக்கு முகம்கொடுத்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் பெரும் முனைப்புக்காட்டி வருகிறது.
முழுநாட்டையும் பாரிய பொருளாதார வலயமாக மாற்றும் இலக்கு நோக்கிய பயணத்தை தமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு தெமட்டகொடையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சியபத் செவன வீட்டுத் திட்டத்தின் வீடுகளை கையளிக்கும் நிகழ்வின் போதே பிரதமர் அரசின் தூரநோக்கு குறித்து தெளிவுபடுத்தினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது:
குப்பை மேட்டினால் எழுந்த நிலைமை நாட்டுக்கு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
மலைபோன்று உயர்ந்து காணப்படும் வெளிநாட்டுக் கடனை குறுகிய காலத்துக்குள் திருப்பிச் செலுத்தி நாட்டை அதிலிருந்து மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பை அரசு ஏற்றிருக்கின்றது. கடந்தகாலங்களில் ஆட்சிக்கு வந்த அரசுகள் எப்போதும்நாட்டை கடனாளியாக உருவாக்கிவிட்டே சென்றன.
எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்குவந்து அந்தக் கடன்களை செலுத்தி வந்துள்ளது.
2014ல் முழுநாட்டையும் வெளிநாட்டுக்கு அடகு வைக்கப்பட்டிருந்தது. 2015ல் சர்வாதிகாரப் பிடியிலிருந்து நாடு மீட்கப்படாதிருந்தால் நாம் பேரழிவினையே சந்தித்திருப்போம்.
சர்வாதிகாரமும் ஜனநாயகமும் ஒன்றாகப் பயணிக்க முடியாது. சர்வாதிகாரம் அடக்குமுறைக்கு நாட்டைக்கொண்டு செல்லும் ஜனநாயகம் மக்கள் கருத்துக்கு வாய்ப்பளிப்பதாகும். நாட்டில் நல்லிணக்கம், சகவாழ்வு தளைத்தோங்க வேண்டுமானால் ஜனநாயகப் பாதை சீராக அமைதல் வேண்டும்.
சிலர் நான் நாட்டை பிரிக்கப் போவதாக பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நாட்டை எவராலும் எந்தச் சக்தியாலும் பிரிக்கவோ, பிளவுபடுத்தவோ முடியாது. நாட்டை பிளவுபடுத்த எவரும் விரும்பமாட்டார்கள்.
எதிர்காலச் சந்ததியினருக்காக நாட்டைக்கட்டியெழுப்புவதே எமது எண்ணமாகும். நாம் எப்போதும் குறுகிய வட்டத்துக்குள் நின்று செயற்பட முடியாது. விரிந்து பரந்த உலகில் நாமும் சிறகு விரித்துப் பறக்க வேண்டும்.
உலகமயமாக்கலுக்குள் நாமும் நுழைய வேண்டும். எமது நாட்டில் காணப்படும் வளங்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்து சமுத்திரத்தின் கேந்திரஸ்தானமாக கொழும்பை மாற்றுவதன் மூலம் பொருளாதார ரீதியில் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும். நாட்டின் அபிவிருத்தியை ஒரு பிரதேசத்துக்கு மட்டும் மட்டுப்படுத்த முடியாது.
மாகாண மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் சகல பகுதிகளுக்கும் அபிவிருத்தி கொண்டு செல்லப்பட வேண்டும். இதில் எவ்விதமான பாரபட்சமும் காட்டப்படக்கூடாது. தெற்காசியாவில் இந்து சமுத்திரத்தில் பிரதான நகரமாக கொழும்பை மாற்றியமைப்பதே எமது இலக்கு.
அந்த இலக்கை அடைவது சுலபமான காரியமல்ல. இது பெரும் சவால் என்பதை நன்கறிவோம். அதற்காக ஒதுங்கி நிற்க முடியாது. நிச்சயம் இந்த இலக்கில் நாம் வெற்றியடைவோம்.
கொழும்பு பெருநகர் அமைப்புத்திட்டத்திலே அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெற்றி இலக்கை எட்டியுள்ளார்.
அதேபோன்று நாட்டின் ஏனைய நகரங்களையும் அந்தந்தப் பகுதிவளங்களைப் பயன்படுத்தி அபிவிருத்தி செய்யும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைக்க எண்ணியுள்ளோம்.
நாம் இப்போது செய்யும் பணிகளின் பிரதிபலனை மக்களால் இன்றோ, நாளையோ கண்டுகொள்ள முடியாது. அதற்கு சிறிது காலமெடுக்கலாம். சிலவேளை நான்கு, ஐந்து வருடங்கள் கூட எடுக்கலாம்.
உலகளாவிய மட்டத்தில் காணப்படும் அத்தனை பயன்பாடுகளையும். எமது நாட்டுக்குக் கொண்டுவருவோம். அதற்கு எமது நாட்டின் வளங்களையே பயன்படுத்துவோம்.
ஒழுங்கான திட்டம் வகுத்துச் செயற்படத் தவறினால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு நாம் முகம்கொடுக்க நேரிடலாம். முதலில் தலைநகர் கொழும்பை நவீன நகராக மாற்றியமைப்போம்.
அடுத்து முழு நாட்டையும் ஆசியப் பிராந்தியத்தின் நவீன மயமான நாடாக மாற்றியமைப்போம். இதனை நாம் கனவாகக் கருதக்கூடாது. பொறுப்பு என்பதை உணர்ந்து செயற்பட அனைவரம் ஒன்றுபட வேண்டும்.