இயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது!
இயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடற்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி முதன்மை உரை ஆற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இயற்கையின் இருப்புக்கு மானிட செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது என்பதோடு மனித சமுதாயத்தின் முதன்மையான பொறுப்பு இயற்கையை பலப்படுத்துவதாகும்.
பூகோளத்தின் ஒட்டுமொத்த உயிரினங்களையும் நிலையாகப் பேணும் பொறுப்பு மனிதனுக்குரியது.
மனிதன் தான் வாழ்வதற்குப் பொருத்தமான சூழலை கட்டியெழுப்புவதும் நேயமான முறையில் உலகளாவிய பொருளாதாரத்தை வழிநடத்துவதும் இன்று எமது முதன்மை பொறுப்புகளாகும்.
எனவே சுற்றாடலுக்கான கடமைகளை நிறைவேற்றுவதில் பிராந்திய ஒத்துழைப்பினை விருத்திசெய்ய வேண்டியது மிக முக்கியமானதாகும்” என்று தெரிவித்தார்.