மாலி சென்ற இலங்கை இராணுவம் மீது தாக்குதல்; இருவர் பலி!
மாலி நாட்டிற்கு ஐ.நா. அமைதி காக்கும் பணி நிமித்தம் சென்ற இலங்கை இராணுவ அணியின் கனரக வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கெப்டன் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை (25) மாலி நேரப்படி 6.30 மணியளவில்மேற்கு ஆபிரிக்கா டுவென்ஷா பிரதேசத்தில் வைத்து இராணுவத்தின் WMZ வகை இராணுவ வாகனம் மீது தூரத்திலிருந்து இயக்கும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை பயன்படுத்தி பாரிய குண்டுத் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாளாந்த இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு வரும்போதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலின்போது சம்பவ இடத்திலேயே இலங்கை இராணுவத்தின் கெப்டன் ஒருவரும் படை வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூவர் காயமடைந்து அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் குறித்த WMZ வகை இராணுவ வாகனம் மற்றும் அதன் பின்புறமாக பயணித்த மற்றுமொரு வாகனத்திற்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் தலைமையகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.