I.A.S. அதிகாரி அமர்ந்த தென்னை மரக்குற்றிக்கு இவ்வளவு மதிப்பா?
புதுக்கோட்டை அருகே நடந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்ட I.A.S. அதிகாரி அமர்ந்த தென்னை மரக்குற்றி இருக்கை 11 ஆயிரம் ரூபாய்க்கு (இந்திய ரூபாய்) விற்பனையாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊர் மக்கள் சார்பில் பொங்கல் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் அண்மையில் நடத்தப்பட்டன.
இவ்விழாவில் I.A.S. அதிகாரி சகாயம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில், கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களின் அடி மற்றும் நுனிப் பகுதிகளைக் கொண்டு அழகிய தோற்றத்தில் வடிவமைத்திருந்த இருக்கைகளையும் மேசைகளையும் வைத்திருந்தனர்.
குறித்த இருக்கையில் அமர்ந்திருந்து I.A.S. அதிகாரி கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தார்.
விழா முடிந்தபின்னர், புதுச்சேரியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் அந்த இருக்கையை 10 ஆயிரம் ரூபாய்க்கு உரியவர்களிடம் விலைக்கு கேட்டார்.
எனினும் அவருக்குக் கிடைக்காத அந்த இருக்கையை அலஞ்சிரங்காடு குருகுலம் பள்ளி நிர்வாகி சிவநேசன் 11 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.
இவ்வாறு கஜா புயலால் முறிந்து வீழ்ந்த மரங்களில் தளபாடங்கள் செய்யப்பட்டு, மேற்கண்ட சிறப்பியல்புகளைப் பெற்றால் மக்களின் இழப்புக்களில் சிறியளவை நிவர்த்திசெய்யலாம் போலும்.