இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு கிழக்கு ஆளுநர் உத்தரவு

இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு கிழக்கு ஆளுநர் உத்தரவு

இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் குறிப்பிட்ட திகதியில் இடமாற்றப்பட்ட பாடசாலைகளுக்கே கடமையை பொறுப்பெடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கல்வித் திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபர்கள் ஆசிரியர்களுக்கிடையிலான சந்திப்பு திருகோணமலையிலுள்ள முதலமைச்சின் செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

கிழக்கு ஆளுநரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதன்போது தமது பிரச்சினைகள் தொடர்பாக அதிபர்கள் ஆசிரியர்கள் ஆளுநரிடம் எடுத்துரைத்தனர்.

எனினும், பாடசாலைகளின் நலன்கருதி இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் குறிப்பிட்ட திகதியில் இடமாற்றப்பட்ட பாடசாலைகளுக்கான கடமைகளை முதலில் பொறுப்பேற்க வேண்டுமென குறிப்பிட்டார்.

இதன் மேலதிக விடயங்கள் தொடர்பாக உரிய திணைக்களத்தின் தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட பின்னர் தீர்மானிக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மாகாண கல்விப் பணியகத்தின் செயலாளர்கள் உயர் அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net