தமிழ் மக்களை ஏமாற்றிய இறுதி தலைவராக மைத்திரி இருக்க வேண்டும்!
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதாக தெரிவித்து தமிழ் மக்களை ஏமாற்றிய இறுதி தலைவராக மைத்திரிபால சிறிசேன இருக்க வேண்டும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று இன்றைய தினம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும், நாட்டின் அனைத்து ஆட்சியாளர்களும் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக கூறி தமிழ் மக்களை ஏமாற்றிய காலம் போதும்.
இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அரசாங்கத்திற்கு ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விடயங்களை தெளிவுப்படுத்தி புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் சமயத்தில் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்தன் காரணமாகவே தற்போதைய ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் ஆட்சி அமர்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்பட்டது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் ஊடாக இந்த விடயங்களை நிறைவேற்றிக் கொள்ளும் அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பரிந்துரைத்த பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அரசாங்கம் இந்த தேவைகளை நிறைவேற்ற தவறினால், மனித உரிமை பேரவைக்கு மீண்டும் வழியை ஏற்படுத்தி கொடுக்க கூட்டமைப்பின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.