நாடாளுமன்ற மோதல்: 59 உறுப்பினர்களுக்கு சிக்கல்!
நாடாளுமன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக 59 உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
கடந்த வருட இறுதியில் நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற மோதல் தொடர்பான அறிக்கை, கடந்த 22ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த அறிக்கையை மேற்கோள்காட்டி பி.பி.சி. சிங்கள சேவை மேற்குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த 59 பேரும் நாடாளுமன்ற அதிகாரம் மற்றும் சிறப்புரிமையை மீறி செயற்பட்டுள்ளனர் என விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 54 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 4 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த அறிக்கையின் பிரகாரம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மீது 12 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, திலம் அமுனுகம, பத்ம உதயசாந்த, ஆனந்த அளுத்கமகே, இந்திக அநுருத்த, மஹிந்தானந்த அளுத்கமகே, ரஞ்சன் ராமநாயக்க, பாலித தெவரப்பெரும, நிரோசன் பிரேமரத்ன, அருந்திக்க பெர்ணான்டோ மீதும் அதிகளவான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மோதலின்போது ஏற்பட்ட சேத விபரங்களாக 325,000 ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் பிளவுற்று பிரதமராக மஹிந்த ராபஜக்ஷ பதவியேற்ற பின்னர், பாரிய சர்ச்சைகள் ஏற்பட்டன. நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமை குறித்து வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அது அரசியலமைப்பிற்கு முரணானதென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதன் பின்னர் கூடிய நாடாளுமன்ற அமர்வுகளில், ஆளும் மற்றும் எதிர்த்தரப்பிற்கு இடையே கடும் கருத்துமோதல் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பில் முடிவடைந்தது. இதன்போது சில உறுப்பினர்கள் மீது மிளகாய்த்தூள் வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.