எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் எதிர்கொள்ளத் தயார்!
பிரதமர் பாணியில் கூட்டமைப்பின் தலைவரும் தனது பதவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்ளத் தான் தயாராகவிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைப்போன்று பதவி ஆசை பிடித்தவர்கள் பட்டியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இணைந்துகொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்து பறிக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டமை அநீதியான செயலென்றும், எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருப்பதற்கு மஹிந்த தகுதியற்றவரென்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்பித்து உரையாற்றியிருந்தார்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“எதிர்க்கட்சி தலைவர் பதவியை நான் கேட்டு வாங்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரிந்துரையின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்களுக்கு அமைய எதிர்க்கட்சி தலைவர் பதவியை சபாநாயகர் எனக்கு வழங்கியிருந்தார்.
மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், அமைச்சரவையின் தலைவராகவும் இருக்கின்ற போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏனைய உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்ந்திருந்தனர்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.