சமஷ்டி பண்புகளுடனேயே வருகிறது புதிய அரசமைப்பு!
புதிய அரசமைப்பு சமஷ்டி பண்புகளுடன் தான் வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையிலும், நிபுணர்கள் மற்றும் சட்டவல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்திலும் சமஷ்டிப் பண்புகள் காணப்படுகின்றன.
அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு திரும்ப பெற முடியாத வகையில் மாகாணசபைகளிடம் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஓரிடத்தில் அதிகாரங்கள் குவிந்திருந்தால் தான் அது ஒற்றையாட்சி. அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டால் அது கூட்டாட்சி (சமஷ்டி). எனவே, இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சொற்பதங்களை – சொல்லாடல்களை தூக்கிப் பிடித்துக் கொண்டு நாம் முரண்படக்கூடாது. வடக்கு, கிழக்கு மக்களிடம் உண்மை நிலைமையை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.
மக்களைக் குழப்பும் விதத்தில் எவரும் கருத்துக்களை வெளியிடக் கூடாது. தெற்கில் உள்ள மக்களை சமாளிப்பதற்காக அரச தரப்பினர் சொல்லாடல்களை தங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துவார்கள்.
இதை நாம் தூக்கிப் பிடிக்கக்கூடாது. புதிய அரசமைப்பு நிறைவேற அனைத்து வழிகளிலும் நாம் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.