தமிழரின் இலக்கை அடைய ஓரணியில் பயணிப்போம்!

எமது இலக்கை அடைய நாம் ஓரணியில் பயணிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“ஒக்டோபர் 26ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியை ஜனநாயக வழியில் முறியடிக்க நாம் பெரிதும் உதவினோம். இதையடுத்து சர்வதேச சமூகம் எமது பக்கம் நிற்கின்றது.
இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களும் எமக்குச் சார்பாக உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
தமிழர்களாகிய எமது இலக்கை அடைய ஓரணியில் பயணிக்க வேண்டும். எமக்குள் வேற்றுமைகள் இருக்கக்கூடாது.
சில தினங்களுக்கு முன் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் என்னைச் சந்தித்துச் கலந்துரையாடினார். இதன்போது இலங்கையின் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட்ட விடயம் தொடர்பிலும் பேசினோம்.
ஒரு கட்டத்தில் அவர், ‘தமிழ் மக்கள் தொடர்ந்தும் உங்களை (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை) ஆதரிப்பார்களா?
இதில் நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ளீர்களா?’ என்று வினவினார். நான் ‘ஆம்’ என்று பதிலளித்தேன். எமது மக்களின் நிலைப்பாட்டை அவரிடம் எடுத்துரைத்தேன்.
எமது மக்களின் மனதை வெல்லும் வகையில் நாம் செயற்பட வேண்டும். அவர்கள் எம் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். எனினும், அந்த நம்பிக்கையை நாம் செயல் வடிவில் உறுதிப்படுத்திக் காட்ட வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலோ அல்லது மாகாண சபைத் தேர்தலோ நடைபெற்றால் அதில் எமது பிரதிநிதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் மேலும் பலப்படுத்த வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 16 உறுப்பினர்கள் எமது கட்சியில் தெரிவானார்கள்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்த எண்ணிக்கையை நாம் அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.