நேரடி விவாதத்திற்கு தயாரா?-ஆறுமுகன் தொண்டமானுக்கு அழைப்பு!
சம்பள விவகாரம் தொடர்பாக நேரடி விவாதம் ஒன்றிற்கு வருமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானை அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிஷ்ணன் செல்வராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹற்றனில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி காரியாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடாகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் தமது பதவியை தூக்கி எறிவதாக ஆறுமுகன் தொண்டமானும், ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொடுக்க தீ குளிக்க போவதாக சொன்ன வடிவேல் சுரேஷும் மஹிந்த ராஜபக்ஷவின் பிணாமி அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டு பின் அதிலிருந்து விலகியவர்கள்.
தொழிலாளர்களை அடமானம் வைத்து அரசியல் குளிர் காயும் இவர்கள் தற்பொழுது 750 ரூபாய் சம்பளத்தை வழங்கி 234 ரூபாயை மாதாந்த சந்தா பணமாக பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
இந்த விடயம் தலைவர்களுக்கு வெற்றியே தவிர தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வெற்றி அல்ல.
அத்தோடு இது நியாயமான சம்பள உயர்வு அல்ல. இதற்காக எமது சங்கமும், ஜே.வி.பியும், அனைத்து தரப்பினர்களுடனும் இணைந்து எதிர்காலத்தில் போராடவுள்ளோம்.
அதற்கு முன்பதாக இந்த புதிய ஒப்பந்தம் தொடர்பில் நேரடி விவாதத்தை ஆறுமுகன் தொண்டமானுடன் மேற்கொள்ள நாம் தயாராகவும் உள்ளோம்“ என அவர் மேலும் தெரிவித்தார்.