மத்தல விமான நிலையத்தின் ஒரு பகுதி இந்தியாவிற்கு!

மத்தல விமான நிலையத்தின் ஒரு பகுதி இந்தியாவிற்கு!

மத்தல விமான நிலையத்தின் 70 வீதமான பங்குகளை இந்தியாவுக்கு வழங்க, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அனுமதி வழங்கும் அமைச்சரவைப் பத்திரமும் தற்போது தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் உடன்பாட்டில் இலங்கை – இந்திய விமான நிலைய அதிகார சபைகள் கைச்சாத்திடவுள்ளன.

இதுதொடர்பில், இரண்டு தரப்புக்களும் கலந்துரையாடியதன் பின்னர் அமைச்சரவைப் பத்திரங்களும் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தல விமான நிலையம் ஆதாயத்தைத்தரும் திட்டமாக இல்லாத காரணத்தினால் அதன் 70 வீதத்துக்கும் குறைவான பங்குகளை ஏற்க இந்தியா மறுத்து வருகிறது,

மேலும், விமான நிலையங்களின் மூலம் உடனடியாக இலாபமீட்ட முடியாது என்றும் அதற்கு 15 ஆண்டுகள் வரை தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கிணங்க, ஆரம்பத்தில் மத்தல விமான நிலையத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்குப் பெற்றுக் கொள்ளவே இந்தியா விரும்பியது.

எனினும், இலங்கை அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, 40 ஆண்டு குத்தகை உடன்பாடாக கையெழுத்திட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இரண்டு தரப்பும் இந்தக் கூட்டு முயற்சி உடன்பாட்டை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மீளாய்வு செய்ய முடியும்.

அத்துடன் பங்கு விகிதம் தொடர்பாகவும் இருதரப்பு இணக்கப்பாட்டுடன் மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net