திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு – பொலிஸார் குவிப்பு!
திருகோணமலை – கிண்ணியா, கங்கைப் பால கீரைத் தீவு பகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மூவர் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அங்கு வந்த கடற்படை வீரர் வான் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த நிலையில் அவர்களில் இருவர் கடலில் பாய்ந்துள்ளதாக தெரியவருகிறது.
கடலில் பாய்ந்த நிலையில் காணாமல் போயுள்ள இரு இளைஞர்களும் கிண்ணியா, இடிமன் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
காணாமல்போனவர்களை தேடும் பணியில் பொதுமக்களுடன் இணைந்து கடற்படையினர் ஈடுபட்டு வருவதுடன், சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தற்போது குறித்த பகுதிக்கு பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ருப் மற்றும் அவரின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்டவர்கள் விரைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காணாமல் போயுள்ள இருவரும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது குறித்த பகுதியில் சற்று பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.