வெனிசுவேலாவில் சமீபத்திய வன்முறைகளில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்!

வெனிசுவேலாவில் சமீபத்திய வன்முறைகளில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்!

வெனிசுவேலாவில் இடம்பெற்ற சமீபத்திய வன்முறைகளில் குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 850 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச் செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கோல்வில்லி தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களின் 26 பேர் அரசாங்க சார்பு படைகளால் சுடப்பட்டுள்ளதாகவும், வீட்டில் வைத்து ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்றும் போராட்டத்தின் போது பொருட்களை சூறையாடியவர்கள் 11 பேரும் என 40 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு ஜனவரி 21 மற்றும் ஜனவரி 26 ஆகிய திகதிகளில் 850 க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் 77 பேர் சிறுவர்கள் எனவும் தெரிவித்த அவர் அதில் சிலர் 12 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கூறினார்.

நாடு முழுவதும் ஜனவரி 23 ஆம் திகதி அன்று நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களின் போது, 696 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த அவர், இந்த எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளை விட, மிக அதிக எண்ணிக்கை என தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, பாரிய மோசடிகள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து தேர்தலை புறக்கணித்தமையால், அங்கு 46.1 வீத வாக்குகள் மட்டுமே பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நிக்கோலஸ் மதுரோ 58 இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார்.

எனினும், இவரது வெற்றியை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மதுரோவை பதவி விலக வலியுறுத்தியும், புதிய தேர்தலை நடத்தக் கோரியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள ஜனாதிபதி நிக்கோலா மதுரோ வன்முறைகளை கட்டவிழ்த்து இரத்த களரியை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (திங்கட்கிழமை) எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்த்க்கது.

Copyright © 3403 Mukadu · All rights reserved · designed by Speed IT net