யாழ்ப்பாணத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் சேகரிப்பு!
யாழில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை கோப்பாய் பொலிஸார் சேகரித்து வருவதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தற்பொழுது அவசரகால சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், பொலிஸார் ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனரென வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“கடந்த காலத்தில் வெள்ளவத்தை பகுதிகளிலும் வீடுகளில் உள்ளோரின் தகவல்களை பொலிஸார் சேகரித்த போது அதற்கு அமைச்சர் மனோகணேசன் எதிர்ப்பு தெரிவித்து, பொலிஸார் தகவல்களை சேகரிப்பதை நிறுத்த வேண்டும் என கோரியதை அடுத்து அது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது கோப்பாய் பொலிஸாரினால் தகவல்கள் கோரப்பட்டு வருகின்றன.
தகவல்களை கோருவதற்கான காரணங்களை பொலிஸ் உயர் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். அதனூடாகவே மக்கள் மத்தியில் தற்போதுள்ள அச்ச நிலைமையை போக்க முடியும்“ என்றும் தெரிவித்தார்.