கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மின் விளக்குகளை சேதப்படுத்திய விசமிகள்!
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அதிகளவான மாவீரர்களது வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன.
மாவீரர் துயிலும் இல்லம் தமிழ் மக்களால் புனிதமான இடமாக நோக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.
தமிழ் மக்களது விடுதலைக்காகப் போராடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த மாவீரர்களை விதைத்த துயிலும் இல்லங்கள் மரியாதைக்குரிய மேலான இடமாகக் கருதி வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.
தமிழ் மக்களின் விடுதலை வீரர்களான மாவீரர்களை விதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் கடந்த 2009 ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறந்த முறையில் பேணப்பட்டு வந்தது.
கடந்த 2009 ஆண்டு தமிழர் தாயகப் பகுதிகள் மீது வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் பாரியளவில் போர் தொடுத்த இலங்கை இராணுவம் பலரைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்ததுடன் தமிழர்களின் வணக்கத்துக்குரிய மாவீரர் துயிலும் இல்லங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கித் துவம்சம் செய்தது.
அவர்களால் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லமும் இடித்தழிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவம் விலகிச் சென்றதன் பின்னர் கிளிநொச்சியில் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தலைமையிலான மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களது உறவுகளால் மாவீரர் துயிலும் இல்லம் தற்துணிவாகத் துப்பரவாக்கப்பட்டு கார்த்திகை-27 இல் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
மாவீரர்களை விதைத்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லக் காணியை அபகரிப்பதற்காகப் பலர் பலதடவைகள் முயற்சித்து வந்தபோதெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது துணையுடன் தடுத்து நிறுத்தப்பட்டு வந்துள்ளது.
மாவீரர்களது வணக்கத்துக்குரிய மாவீரர் துயிலும் இல்லத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது ஒழுங்கமைப்பில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தைச் சுற்றி மதில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஒருபகுதிக்கான மதிலமைப்பு வேலைகள் முழுமையாகப் பூர்த்தியாகியுள்ள நிலையில் இனவிரோதிகளின் காட்டிக்கொடுப்பால் மதில் அமைக்கும் பணிகளுக்கும் பல தடைகளும் இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவுகளால் பொருத்தப்பட்டிருந்த சூரிய மின்கலத்துடன் கூடிய மின்விளக்குகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டு அதிலுள்ள பற்றறிகள் திருடப்பட்டுள்ளன.
இதனைக் கேள்விப்பட்ட கிளிநொச்சி மாவீரர் பணிக்குழுவின் தலைவர் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தலைமையிலான மாவீரர் பணிக்குழுவினர் அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மாவீரர் பணிக்குழுவின் தலைவர் ச.பசுபதிப்பிள்ளை,
“எமது இன விடுதலைக்காப் போராடி தங்கள் இன்னுயிர்களையே எமக்காக உவந்தளித்த எமது உறவுகளான மாவீரர்களுக்காக நாம் எந்த நன்றிக் கடனும் செய்ய முடியாது.
அவர்களது தியாகம் மேலானது. அவர்கள் எமக்காகத் தங்களது மேலான இன்னுயிர்களையே ஆகுதியாக்கினார்கள். அவர்களை விதைத்த வித்துடல்கள் உள்ள கல்லறைகளும் சிதைத்தழிக்கப்பட்டுள்ளன.
அவர்களை நினைவுகூரும் இவ்விடத்தில் பொருத்தப்பட்ட மின்விளக்குக்களைக்கூட விட்டுவைக்காது சேதப்படுத்தித் திருடிச் செல்ல எப்படி அந்த விசமிகளுக்கு மனசு வந்ததோ தெரிவயில்லை.
இது மிகவும் வேதனையானதும் கேவலமானதுமான ஒரு செயற்பாடு. இதனைச் செய்ய அவர்களால் எப்படி முடிந்ததோ தெரியவில்லை.
எமது இன விடுதலைக்காக தமது இன்னுயிர் உவந்தளித்தமானமாவீரர்கள் என்றைக்கும் தமிழ் இனத்தின் இதயங்களிலிருந்து அகற்ற முடியாத புனிதர்கள்.
அவர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களும் புனிதமானவை. அவர்களுக்காக அவர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களையாவது பேணி அவர்களை மனதிருத்தி வழிபடும் நன்றியுள்ளவர்களாக நாம் செயற்படுவோம் என்றார்.