தமிழர்களுக்காக எத்தகையோருடனும் பேசத் தயார்!
தாங்கள் கேட்ட கேள்விகளுக்கும் தீர்வுகளுக்கும் பதில் வழங்க முடியாமல், மகிந்த தரப்பினர் கூட்டங்களைப் புறக்கணித்தார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கான தீர்வு வழங்கல் தொடர்பான பேச்சுவார்த்தைகளில், அசமந்தப் போக்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கடைப்பிடித்தது என, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்துச் சுற்றுப் பேச்சுகளிலும், தாங்கள் பங்குபற்றியதாகவும் தங்களின் தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்தே, பேச்சுவார்த்தைக்கு வராமல் மகிந்த தரப்பினர் பின்வாங்கியதாகவும் பழையதைப் பேசுவது காலவிரயம் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் மகிந்த ராஜபக்ச எந்தவேளையிலும் தங்களுடன் பேசமுடியுமெனவும் தமிழ் மக்களின் எதிர்காலத் தீர்வுக்காக, எத்தகைய தரப்பினருடனும் பேசத் தயாரெனவும் சம்பந்தன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.