ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க வேண்டும்!
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சுயாட்சி அதிகாரம் மிக்க தமிழ் மக்களுக்கான தேசம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் பார்சிலோனா வலியுறுத்தியுள்ளது.
இலங்கை தொடர்பாக ஸ்பெயின் நாட்டின் பிராந்திய அரச கட்டமைப்பிற்குள் ஒன்றான பார்சிலோனாவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயங்கக் கூடாது என்றும் அரசியல் கைதிகளை இலங்கை அரசாங்கம் தாமதமின்றி விடுதலை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்களும் இதில் அடங்குகின்றன.
அத்தோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க சிறப்பு தூதுவரை ஐக்கிய நாடுகள் சபை நியமிக்க வேண்டும் என்றும் ஸ்பெயினின் பிராந்திய அரச கட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை தொடர்பான விடயங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரஸ்தாபிக்கவுள்ள நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.