தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட கனேடிய எதிர்க்கட்சி குரல் கொடுக்கும்!
இலங்கை தமிழர்களின் மனித உரிமையையும் ஜனநாயக உரிமையையும் நிலைநாட்ட, கனேடிய கொன்சவ்வேட்டிவ் கட்சி உறுதியாகக் குரல் கொடுக்குமென கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் அன்ரூ ஸ்சியர் அறிவித்துள்ளார்.
மிசிசாக்க தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ் மரபுத் திங்கள் மற்றும் பொங்கல் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கையைப் பொறுத்தவரையில், மேற்குலக நாடுகளிடமிருந்து கணிசமான தொகை நிதியுதவியைப் பெறுகின்ற ஒரு நாடு என்ற வகையில், இலங்கை தனது ஜனநாயக விழுமியங்களைப் பேணுவதற்கும் மனித உரிமையை மதிப்பதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்.
கனடாவில் ஆட்சியிலுள்ள லிபரல் கட்சி கனடிய தமிழ் மக்களுக்கு கடந்த தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் குறித்து போதிய எந்த நடவடிக்கையையும் எடுக்காமலிருப்பது கவலைக்குரியது.
அதனால் தாம் கடந்த வருடம், ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்த விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கும்படி கனடிய அரசுக்கு பகிரங்க அழுத்தம் கொடுத்தோம்
கொன்சவ்வேட்டிவ் கட்சியைப் பொறுத்தவரை, கனடிய நாடு உலகெங்குமுள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்துப் பேணும் விடயத்தில் உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்றும், பேச்சுரிமை மற்றும் மனித உரிமை பாதுகாப்பு விடயத்தில் இன்னும் கனதியான பங்களிப்பை வழங்க வேண்டுமென்றும் நம்புகிறது” என கூறினார்.
மேலும் மிகவும் கட்டுக்கோப்பும் கடின உழைப்பும் கொண்ட தமிழ் சமூகத்தினரை வியந்து பாராட்டிய அன்ரூ ஸ்சியர், தமிழர்களின் வளர்ச்சியையும் எழுச்சியையும் தாம் பெரிதும் மதிப்பதாகக் கூறி, தமது பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.