யாழில் கஞ்சா கடத்திச்சென்ற ஒருவர் கைது!
யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மணி பகுதியில் வைத்து ஒரு தொகுதி கஞ்சாவைக் கடத்திச்சென்ற ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் கைதுசெய்துள்ளனர்.
செம்மணிப்பகுதியில் கஞ்சாவை கடத்தப்படுவதாக மாவட்ட குற்றப்புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் ஜே.ஜெயறோசனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகர் கர்சன் சமரக்கோன் தலைமையிலான அணியினரோடு துரிதமாக செயற்பட்ட குற்றப்புலனாய்வுப் பொலிஸார் செம்மணிப் பகுதியில் வைத்து கஞ்சா கடத்த தயார் நிலையில் நின்ற 37 வயதான ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 14 கிலோ 610 கிராம் நிறையுடைய கஞ்சா பொதியினையும் கைப்பற்றியுள்ளனர்.
கஞ்சாவோடு கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்துவருவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் அண்மைய நாட்களில் யாழில் தொடர்ச்சியாக கஞ்சா கைப்பற்றப்படுவதோடு கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.