செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இராணுவம் அச்சுறுத்தல்!
செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை இராணுவம் அச்சுறுத்திய சம்பவம் முல்லைத்தீவு, கணுக்கேணியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கணுக்கேணிப் பகுதியில் பொதுக் குழாய்க்கிணறு ஒன்றில் இருந்து இராணுவத்தினர் தொடர்ச்சியாக நாள்தோறும் இருபதிற்கு மேற்பட்ட தண்ணீர் பௌசர்களில் நீரினை எடுத்து செல்கின்றனர்.
இதனால் அக்கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக உரிய தரப்பினரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சென்று இராணுவத்தினரை நீர் எடுக்கவேண்டாம் என்று கூறியதால் இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்து வகையில் இராணுவத்தினர் ஒளிப்படம் எடுத்துள்ளதுடன், ஊடகவியலாளர் ஒருவரின் கமராவினையும் பறிக்க முற்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த செய்தியைப் பதிவு செய்துகொண்டிருந்த ஊடகவியலார்களை அங்கிருந்த இராணுவ அதிகாரிகள் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.