விடுதலைப் புலிகளின் பிளவே போர் முடிவிற்கு காரணம்!
நாட்டில் சமாதானம் ஏற்பட்டமைக்கு இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா கடந்தகாலத்தில் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றில் பதிவுசெய்யப்பட கூடியது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
திருகோணமலை – ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
அன்று விடுதலை புலிகள் இயக்கம் இரண்டாக பிளவடைந்தமையின் காரணமாக போர் முடிவடைந்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டது என்பதை எவராலும் மறைக்க முடியாது. இதுவே உண்மையான வரலாறு.
அலி ஸாஹிர் மௌலானா அன்று விடுதலை புலியினரை இரண்டாகப் பிளவுபடுத்தாவிட்டால் இன்றும் எம்மால் விடுதலை புலியினரை தோற்கடிக்க முடியாது.
இதனால் எவர் எதைச்சொன்னாலும் எவர் இதை மறந்தாலும் இலங்கையின் வரலாற்றில் இந்த நாடு பிரிக்க முடியாத நாடு என்றும் பேசப்படும் வேளைகளில் எல்லாம் அலி ஸாஹிர் மௌலானாவின் தியாகம் நினைவு கூரப்படவேண்டியதே அவசியம்.
இன்று நான் எனது சொந்த அமைச்சருக்கான பாதுகாப்பில் மாத்திரமே இங்கு விஜயம் செய்திருக்கிறேன். மேலதிக பாதுகாப்பு எதுவும் கிடையாது.
இல்லாவிட்டால் என்னால் இன்று இவ்வாறு சொற்ப பாதுகாப்புடன் வரமுடியாது. எனவே இந்த நிலை ஏறாவூருக்கு மாத்திரமல்ல முழுநாட்டிற்கும் பொருந்தும்.
அலி ஸாஹிர் மௌலானா இந்த விடத்தைச் செய்யும் போது என்னோடு பேசினார். அப்போது நான் சொன்னேன் ‘ இது நல்ல பெறுமதியான வேலைதான் ஆனால் அதன்பிறகு நீங்கள் உயிரோடு வாழ முடியாது என்றேன்.
அதன்பிறகு எனது பக்கம் வருகிறேன் என்றார். வேண்டாம் இந்தப்பக்கத்திற்கும் வரவேண்டாம் என்றேன். பின்னர் அவர் அனைத்தையும் செய்துவிட்டு நாடுகடந்து அமெரிக்காவுக்கு சென்றார்.
அங்கு நாங்கள் அவரைச் சந்தித்தோம். அதன் பிறகு அவர் எனது குடும்ப நண்பராகினார்.
எனினும் அவர் மீண்டும் நாட்டிற்கு வந்து உள்ளூராட்சி மன்றத்திலிருந்து தனது அரசியலை ஆரம்பித்து இன்று இராஜாங்க அமைச்சராக இருக்கிறார். எதிர்காலத்தில் பிரதமர் அவருக்கு சலுகைகளைச் செய்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.