சட்டவிரோதமாக கடல் வழியே சென்ற 70 இலங்கையர் ரீயூனியன் தீவில் கைது!
இலங்கையிலிருந்து சுமார் 70பேருடன் கடல் வழியாக சட்டவிரோதமாக சென்ற படகு ரீயூனியன் தீவை சென்றடைந்துள்ளதாகவும் 70பேரும் அங்கு கைதுசெய்யப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3வாரங்களுக்கு முன்னர் புறப்பட்ட இந்த ஆழ்கடல் மீன்பிடிப் படகில் 50ஆண்களும், 8பெண்களும், 5பிள்ளைகளும்,7மீனவர்களும் அடங்குவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இத்தீவு பிரான்ஸ் நாட்டின் 27பிராந்தியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இத் தீவை சென்றடைந்துள்ள இலங்கையரை திருப்பி அனுப்புவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7பேர் மீன்பிடி படகில் ரீ யூனியன் தீவை சென்றடைந்தனர்.
இரண்டாவது குழு நீர்கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதுடன் இப்படகு கடந்த நான்காம் திகதி ரீ யூனியன் தீவுக்கருகில் சென்றது. இதன்போது அதிகாரிகளால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது சென்றுள்ள 70இலங்கையர் உட்பட ஏற்கனவே சென்றவர்களுடன் அனைவரும் திருப்பி அனுப்பப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரீ யூனியன் தீவுக்கு சட்டவரோதமாக ஆட்களை ஏற்றிச்சென்றுள்ள படகின் உரிமையாளர், தமது படகு ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக சென்றுள்ளதாக எண்ணியுள்ளார்.
அவருக்கு தெரியாமல் தனது படகில் ஆட்களை கடத்திச்சென்றுள்ளதாக அவர் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.