மைத்திரி இல்லை! ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பசில் தகவல் !
தமது கட்சியின் உறுப்பினர் அல்லாத ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாரில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஸ, கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிதிகளுடனான சந்திப்பின்போது இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“கட்சியின் உறுப்பினர் அல்லாத ஒருவரை ஜனாதிபதியாக்குவதற்கு எவராலும் அழுத்தங்கள் கொடுக்க முடியாது.
கிராம மட்டத்திலுள்ள மக்களின் விருப்புக்கு மாற்றமான ஒருவர் சார்பாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்காது.
நிச்சயமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சார்ந்த ஒரு ஜனாதிபதியே உருவெடுக்கவுள்ளதாக தமது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.
அந்த வேட்பாளர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சார்ந்தவர் என்பதுடன், மொட்டு சின்னத்திலேயே அவர் போட்டியிடுவார்.
எமது கட்சிக்கு முன்னுரிமை வழங்கப்படும். அத்துடன் கட்சி உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன கூட்டணி அமைத்து எதிர்வரும் காலங்களில் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பசில் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.