யாழில் அரச அதிகாரிகளின் அசமந்தத்தால் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட சோகம்!
யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தினரின் வார்த்தையை நம்பி புதிய வீடு கட்டுவதற்காக 7 ஆண்டுகளாக வாழ்ந்த கொட்டிலை அகற்றிய குடும்பத் தலைவர், அந்தக் கொட்டில் சரிந்து வீழ்ந்ததில் கால் முறிவடைந்து படுக்கையில் உள்ளார்.
இந்த நிலையில், வீட்டுத் திட்டம் உங்களுக்கு (அந்தக் குடும்பம்) கிடைத்துள்ளது என்று தவறுதலாகக் கூறியுள்ளோம் எனப் பிரதேச செயலகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் இருப்பதற்கு இருப்பிடம் இல்லாமல், வாழ்வாதாரத்துக்கு வழிதெரியாமல் குடும்பத்தினர் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 30, காரைநகர் வீதி, மீனாட்சிபுரம் கோட்டை என்னும் முகவரியில் உள்ள குடும்பத்தினரே இத்தகைய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
திருமணமாகி கடந்த 19 ஆண்டுகளாக சொந்தக் காணி, வீட்டு வசதியின்றி இரவல் காணியில் மு.சத்தியகுமார் இருந்துள்ளார். கூலி வேலைகளைச் செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றார்.
கடும் உழைப்பால் யாழ்ப்பாணப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 30 காரைநகர் வீதி, மீனாட்சிபுரம், கோட்டை எனும் முகவரியில் உள்ள காணியை வாங்கியுள்ளார்.
அதில் தகரக் கொட்டில் ஒன்றை அமைத்து அங்கு வசித்துள்ளார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் பாடசாலை செல்கின்றனர். அவர்களுடைய கல்விச் செலவு, உள்பட வாழ்வாதாரம் அனைத்தும் அவருடைய உழைப்பில் இருந்தே பெறப்படுகின்றன.
சொந்தக் காணி வைத்திருந்தும், கடந்த 7ஆண்டுகளாக எந்தவொரு வீட்டுத்திட்டமும் சத்தியகுமாருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.
கடந்த 23ஆம் திகதி யாழ்ப்பாணப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வீடுகள் அற்ற மக்களுக்கு பிரதேச செயலகத்தில் கூட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்துக்கு 175 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இடைக்கால கணக்கு அறிக்கையின் ஊடாக 48 வீடுகளுக்கு முதல்கட்டமாக நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.
மீனாட்சிபுரம் பகுதியில் 5 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சத்தியகுமாரும் அதில் ஒரு பயனாளியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கான அடிக்கல் நடுவதற்கு நாளையே – உடனடியான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சத்தியகுமாரின் காணி சிறியது. தங்கியிருந்த தற்காலிகக் கொட்டிலை அகற்றினாலே வீடு அமைக்க முடியும். அதனையடுத்து இரவோடு இரவாக சத்தியகுமார் தற்காலிகக் கொட்டிலை அகற்றியுள்ளார்.
எதிர்பாராத விதமாக கொட்டில் சரிந்து சத்தியகுமாரின் மேல் வீழ்ந்தது. அவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கால் முறிந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருடைய காலில் தகடு வைக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்கள் அவர் படுக்கையிலேயே இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
வீடு அமைப்பதற்கு கடன் வாங்கி, கல் மற்றும் மண் போன்றவற்றை சத்தியகுமார் கொள்வனவு செய்துள்ளார். பிரதேச செயலகத்தால் நடத்தப்பட்ட கூட்டத்துக்குப் பின்னர் பிரதேச செயலகம் சத்தியகுமாருடனோ, அவரது மனைவியுடனோ தொடர்பு கொள்ளவில்லை.
சத்தியகுமாரின் மனைவி ஒரு வாரத்தின் பின்னர், பிரதேச செயலகம் சென்றுள்ளார். வீடு தொடர்பில் விசாரித்தார். அவருக்குப் பேரதிர்ச்சி கொடுக்கும் தகவலை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
வீடு உங்களுக்கு வரவில்லை, தவறுதலாக நீங்கள் உள்வாங்கப்பட்டுள்ளீர்கள் எனப் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது என்று சத்தியகுமாரின் மனைவி தெரிவித்தார்.
மாவட்டச் செயலகத்துக்குச் சென்று விவரங்களைப் பார்த்தபோதும் அதில் தமது பெயர் இல்லை என்றும் சத்தியகுமாரின் மனைவி குறிப்பிட்டார்.
கொட்டில் வீடு என்றாலும் நாளாந்தம் உழைக்கும் பணத்தில் வாழ்ந்த சத்தியகுமார் குடும்பம் தற்போது அந்தக் கொட்டிலும் இன்றி, வாழ்வதற்கு வீடும் இன்றி, சத்தியகுமாரின் உழைப்பும் இன்றித் துவண்டுபோயுள்ளது.
‘கடும் உழைப்பாளி மாதம் 20ஆயிரம் ரூபாய் உழைப்பார். அதிலேயே பிள்ளைகளின் கல்விச் செலவு, சாப்பாடு என்று வாழ்ந்துவந்தோம். இப்போது வாழ்வதற்கு வழியற்று நிற்கின்றோம்.
ஆறுமாதங்கள் படுத்திருந்தே காயத்தை ஆற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இனி எமக்கு எப்படி வருமானம். இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு நான் எங்கு செல்வேன். தற்போது அயலில் உள்ள ஒரு வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ளோம்.
படுக்கையில் உள்ள எனது கணவரையும், பாடசாலை செல்லும் பிள்ளைகளையும் எத்தனை நாளைக்கு இங்யே வைத்திருக்க முடியும்.
எமக்கு வீடு கிடைத்துள்ளது என்று கூறி கடிதம் தந்ததால் தானே நாங்கள் கொட்டிலைக் கழற்றினோம். கடன்பட்டு கல், மண் பறித்தோம். இப்போது அந்தக் கடனை யார் கட்டுவார்கள், நாங்கள் சாப்பிடுவதற்கு என்ன செய்யப் போகின்றோம்?’ என்று சத்தியகுமாரின் மனைவி கண்ணீர் வடித்தார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பிரதேச செயலர் பொ.தயானந்தனின் தனிப்பட்ட அலைபேசி இலக்கத்துக்கு குறித்த ஒரு தரப்பினரால் நேற்றுப் பகல் 1.10 மணிக்கு இரண்டு முறை அழைப்பு எடுத்த போதும் அவர் பதிலளிக்கவில்லை.
மீண்டும் 1.16 மணிக்கு அலுவக தொலைபேசிக்கு அழைத்தபோதும் பதிலளிக்கவில்லை. மூன்றாவது தடவையாக பகல் 1.50 மணிக்கு பிரதேச செயலரின் தனிப்பட்ட அலைபேசிக்கு அழைப்பு எடுத்தபோதும் அதற்கும் பதிலளிக்கவில்லை.
இறுதியாக 1.52 மணிக்கு அலுவலகத் தொலைபேசிக்கு அழைப்பு எடுத்தபோதும் பதிலளிக்கவில்லை.