சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்!
சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் இருப்பது போன்று, அவர்களுக்குரிய முக்கியத்துவம் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்தின் வருடாந்த இல்லா மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி வித்தியாலய அதிபர் க.சந்திரகுமார் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மிகவும் வறுமைக்கு மத்தியில் தேசிய மட்டம் வரை விளையாட்டில் தடம் பதிக்கும் இவ்வாறான பாடசாலைகளுக்கு தேடி வந்து உதவி செய்யக் கூடிய தேவை இருக்கின்றது.
சாதனை படப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் இருப்பது போன்று சாதனை படைப்பவர்களுக்கு அவர்களுக்குரிய பரிசுகளை பொதுப் பரிசாக வழங்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.
ஒரு எல்லைக் கிராமத்தில் பல இன்னல்களுடன் இப்பிரதேச மாணவர்கள் தமது கல்வியைத் தொடந்து வருகின்றனர்.
இவ்வாறான கிராமங்களிலிருந்து சாதனை படைக்கின்றனவர்களை உண்மையில் சரித்திர நாயகர்களாக நாங்கள் பாராட்ட வேண்டும்.
இப்பிரதேசத்தில் அமைந்துள்ள சங்கர்புரம், மற்றும் கணேசபுரம் கிராமங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாவை அங்குள்ள மைதான புனரமைப்புக்கு ஒதுக்கீடு செய்துள்ளேன்.
அதேபோல் இப்பாடசாலையில் அமைந்துள்ள மைதானத்தைப் புனரமைப்பதற்கும் நான் 10 இலட்சம் ரூபாவை இவ்வருடம் வருங்குவேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் மேலும் தெரிவித்துள்ளார்.