கலை – இலக்கிய – பண்பாட்டு அற்ற அரசியல் தேசியவாதமாகாது.

தேசிய சமூக வளர்ச்சியில் அதற்கு இருக்கக்கூடிய அறிவியல் தரம், கலை- இலக்கியம் – பண்பாடு – உணவு பழக்க வழக்கம் – விளையாட்டு என்பன சிறப்பான இடத்திற்குரியவை. ஒருவகையில் ஒரு தேசிய இனத்தின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான அளவு கோல்களாகவும் இவைகள் உள்ளன.
ஒரு பொது மூலத்தில் இருந்தே Culture என்ற பதம் பிரெஞ்சு, லத்தீன் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிரயோகத்திற்கு வந்தது. இதன்படி நிலத்தை உழுவது, பயிரை வளர்ப்பது, உடல்நலத்தைப் பேணுவது என்ற மூலப் பொருளில் இருந்து இதன் தோற்றம் அமைந்தது.
இதன் அடிப்படையில் நடத்தைகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், விழுமியங்கள், மனப்பாங்கு விருத்தி போன்ற பொருளடக்கமும் இணைந்து கொண்டது. மேலும் மொழி, சம்பிரதாயங்கள், கலை அம்சங்கள் என்பனவும் இணைந்து தனித் தனி அடையாளங்களுக்குரிய பண்பாட்டு வேறுபாடுகள் உருவாகின. இதனால்
ஆங்கிலப் பண்பாடு, பிரெஞ்சுப் பண்பாடு, தமிழ்ப் பண்பாடு, மேலத்தேசப் பண்பாடு, கீழத்தேசப் பண்பாடு என அவை அடையாளப்படுத்தப்படும் நிலையும் உருவானது.
“பண்பாடு” என்று தமிழில் பிரயோகிக்கப்படும் பதமும் மேற்படி மொழிகளில் காணப்படுவது போல் நிலத்தைப் பண்படுத்துதல், விவசாயம் செய்தல் (Agriculture) என்னும் அடிப்படைப் பொருளைக் கொண்டதாய் உள்ளது.
விவசாய செயல் முறையில் இருந்து இப்பதம் தோன்றி பின்பும் மனத்தை பண்படுத்துதல், வாழ்வைப் பண்படுத்துதல் என விரிவடையலாயிற்று. மனித வாழ்வின் தீர்க்கமான பகுதியாய் அரசியல் அமைவதால் அரசியற் பண்பாடு என்ற பதம் இணைந்து வளரலாயிற்று.
இந்தவகையில் “ஜனநாயகம” என்பது ஒரு பண்பாடு “சோசலிஸம்” ஒரு பண்பாடு என ஒரு முழுநீள அரசியல் முறைமைகள் “பண்பாடு” என்ற பதத்தால் அழைக்கப்படலாயிற்று.
1935ஆம் ஆண்டு Sidney and Beatrice Webb: என்போர் Soviet Communism: A New Civilization என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினர். ஒரு முழு அரசியல் முறையுமே இங்கு பண்பாடு, நாகரகீம் என்ற வார்த்தைகளால் அழைக்கப்படும் அளவிற்கு இதன் பொருள் விரிந்தது. “கைத்தொழிற் பண்பாடு” என்ற பதம் மேலும் பரந்த பொருளைத் தரும்வகையில் பிரயோகிக்கப்படுகிறது.
அனைத்தும் அரசியலுக்குக் கீழ்பட்டவை என்ற வகையில் பண்பாட்டை அரசியற் பார்வைக்கு ஊடாக நோக்க வேண்டும். தேசிய சமூக உருவாக்கம், விடுதலை, புரட்சி, அந்நிய எதிர்ப்பு சமூக ஏற்றத்தாழ்வு. போன்ற பிரச்சினைகள் எழும்போதெல்லாம் மேற்படி அறிவியல், கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டுப் பணிகள் முன்னணிப் பாத்திரம் வகிக்கத் தொடங்குகின்றன.
தமிழ் மக்களின் அரசியலைப் பொறுத்த வரையில் அறிவியல் கவனிப்பாரற்றுக் கைவிடப்பட்டவை மட்டுமல்ல அது புறக்கணிக்கப்பட்டதாயும் உள்ளது. கல்வி வளர்ச்சியை தமிழ்ச் சமூகம் அடைந்திருந்த போதிலும் அரசியல் சமூக வளர்ச்சிக்கான அறிவியல் பரிமாணத்தை அது பெறத் தவறியுள்ளது.
கலை – இலக்கியம் – பண்பாடு சார்ந்து பாரம்பரியமாக இருந்துவந்த விடயங்கள் ஒருவகை நீட்சியைப் பெற்றிருந்தாலும் புதிய தேவைகளுக்குப் பொருத்தமாக அவை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படவில்லை. பொதுவாகத் தமிழ்த் தேசியவாதம் உணர்வுபூர்வமாக கட்டமைக்கப்படவில்லை.
இந்நிலையில் கலை-இலக்கியம்-பண்பாட்டுப்பணிகள் பற்றிய ஒரு தேசியச் சிந்தனை குறிப்பாகச் சுதந்திரத்திற்கு முன்-பின்னான காலங்களில் எழத் தவறியது.
பொன்னம்பலம் காலம், செல்வநாயகம் காலம், அமிர்தலிங்கம் காலம், பிரபாகரன் காலமென தமிழத் தேசியத்தின் காலத்தை தலைமைத்துவ அடிப்படையில் பிரித்து இக்காலகட்டங்களுக்குரிய கலை-இலக்கிய-பண்பாட்டு வளர்ச்சிகளை மதிப்பீடு செய்ய வேண்டும்.
ஆயுதப் போராட்ட தலைமைத்துவம் அல்லாத பொன்னம்பலம் காலம், செல்வநாயகம் காலம், அமிர்தலிங்கம் காலம் என்ற இந்த மூன்று காலங்களையும் எடுத்துக் கொணடால் தலைமைத்துவ மட்டங்களில் மேற்படி கலை – இலக்கிய – பண்பாடு பற்றிய சிந்தனைகள் குறிப்பிடக்கூடிய அளவிற்கு காணப்படவில்லை.
அரசியலைப் பற்றி இவர்கள் பேசிய அளவிற்குப் பொருத்தமாக கலை – இலக்கிய – பண்பாட்டுப் பணிகள் பற்றி இவர்கள் சிந்திக்கவோ, செயற்படவோ இல்லை.
இங்கு தமிழ்த் தேசிய அரசியலைப் பற்றிப் பேசியவர்களுக்குப் புறம்பாக ஐக்கிய இலங்கைத் தேசியம் பேசிய இடதுசாரிகளே கலை-இலக்கியத்திற்கு செயல்பூர்வமாக தலைமைதாங்கும் நிலை காணப்பட்டது.
அதாவது தமிழ்த் தேசியம் பேசுவோர்களின் கைகளில் அரசியற் தலைமையும், ஐக்கிய இலங்கைத் தேசியம் பேசிய இடதுசாரிகளின் கைகளில் கலை-இலக்கியம் – பண்பாடு சார்ந்த தலைமைத்துவமும் காணப்பட்டது.
இடதுசாரிகள் தமிழத் தேசியத்திற்கு அப்பால் இலங்கைத் தேசியம் பற்றிப் பேசிய போதிலும் தமிழ்ச் சமூகத்தில் காணப்பட்ட தீண்டாமை, சாதி ஏற்றத்தாழ்வு என்பனவற்றிக்கு எதிராக கலை-இலக்கியங்களைப் படைப்பதில் முன்னணிப் பாத்திரம் வகித்தனார்.
இவை சார்ந்து ஏற்பட்டிருக்கக்கூடிய முன்னேற்றங்களுக்கு தமிழ்த் தேசியம் பேசியவார்களை விடவும் இவர்களே அதிகம் பொறுப்பானவார்கள் என்ற முக்கியத்துவம் இவர்களுக்கு உண்டு. இப்படைப்புக்களின் தரம் பற்றி இக்கட்டுரை பேசவில்லை.
இவர்கள் தமிழ்த் தேசியம் பற்றிப் பேசாது அல்லது அதற்கு எதிராகப் பேசிய போதிலும் தமிழ்ச் சமூகத்தில் காணப்பட்ட தீண்டாமைக்கும், சமூக ஏற்றத்தாழ்விற்கு எதிரான இவர்களது பணி தமிழ்த் தேசியத்தின் ஓர் அங்கமான சமூக ஒருமைப்பாட்டை உருவாக்குவதில் நற்பங்களிப்பைச் செய்திருக்கிறது. அது கூடவே பண்பாட்டு அர்த்தத்தில் தமிழ்ச் சமூகத்தை செழுமைப்படுத்தவும், மேம்படுத்தவும் இது ஒரு முக்கிய பங்களிப்பாய் அமைந்தது.
அதேவேளை தமிழ்த் தேசியத்தைக் கொள்கையாகக் கொண்ட உதிரியான படைப்பாளிகளின் பங்களிப்புக்களும் ஆங்கே உண்டு என்பதும் கவனத்திற்குரியது.
ஆயுதப் போராட்ட அரசியல் கொண்ட பிரபாகரன் காலத்தில் கலை-இலக்கியம் – பண்பாடு பற்றிய சிந்தனை இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டது. குறிப்பாக போராளிகள் கலை-இலக்கிய படைப்புக்களிலும், பண்பாட்டுப் பணிகளிலும் ஈடுபட்டனர். உணவுப் பழக்க வழக்கம், விளையாட்டு என்பன தொடர்பான உணர்வும் கூடவே இத்துடன் இணைந்திருந்தது.
குறிப்பாக பெண் போராளிகள் மத்தியில் கலை-இலக்கியம்-பாண்பாடு சார்ந்த அக்கறை முனைப்பாகக் காணப்பட்டது. இங்கு கலை-இலக்கிய படைப்புக்களின் தரம் பற்றியும், தன்மை பற்றியும் இக்கட்டுரை பேசவில்லை. இவை தொடர்பாக எடுக்கப்பட்ட முயற்சிகளும், ஆர்வங்களும் மட்டுமே இங்கு கவனத்தில் எடுக்கப்படுகிறது.
இலக்கியப் படைப்புக்கள், தெருவெளி நாடகங்கள், பரதநாட்டியம்,குறும்படங்கள், திரைப்படம், நிழற்படம், ஓவியம் போன்ற விடயங்கள் இக்காலத்தில் உணர்வுபூர்வமான கவனத்தைப் பெற்றிருந்தன. குறுப்படங்கள் சில சர்வதேச தரத்தை எட்டக்கூடிய வகையில் வளர்ந்தன. நிழற்படத் துறையிலும் இத்தகைய வளர்ச்சி பெரிதாகக் காணப்பட்டது.
இக்கால கட்டத்தில் குறிப்பாக வன்னியில் கலையரங்கங்கள் ஆங்காங்கே நிர்மாணிக்கப்பட்டன.
மேலும் குறிப்பாக போராளிகளின் முகாம்களில் கலை நிகழ்வுகளுக்கான மண்டபங்கள் பரவலாகக் காணப்பட்டன. இவை இத்துறை சார்ந்த உணர்வுபூர்வமான அக்கறையை வெளிக்காட்டி நின்றன.
சிறுவர் இல்லங்களான “செஞ்சோலை” “காந்தரூபன் அறிவுச்சோலை‟ என்பனவற்றில் இசை-நாடகம் மற்றும் கலை நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் பெரிதாகக் காணப்பட்டன.
விடுதலைப் புலிகளுக்கு அப்பால் குறிப்பாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இக்காலகட்டத்தில்அறிவியல்-கலை-இலக்கியம்-பண்பாடு சார்ந்த விடயங்களில் உணர்வுபூர்வமான பங்களிப்புக்களை ஆற்றினர்.
மேற்படி காலகட்டங்களில் ஏற்பட்ட கலை-இலக்கிய-பண்பாட்டுச் செயற்பாடுகள் பற்றிய மதிப்பீடும் விமர்சனமும் இன்னொரு புறம் செய்யப்பட வேண்டும். என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
போதியளவு சிறப்பான கலை- இலக்கிய-பண்பாட்டு வளர்ச்சி கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி நிகழ்ந்தன அல்லது நிகழ்கின்றன என்று கூறுவதற்கு இல்லை. இவை உணர்வுபூர்வமாக பேரார்வத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்கான ஒரு முன்னோட்டப் பதிவு மட்டுமே. மனச்சாய்வுகளுக்கு இடமின்றி ஒரு பொது அறிவியல் நோக்கில் இவை அனைத்தும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.
முள்ளிவாய்க்காலின் பின்னான காலம் தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு புதிய யுகம். ஆனால் இந்த யுகத்திற்குரிய கலை-இலக்கியம்-பண்பாடு சார்ந்த
தலைமைத்துவத்தை அரசியல் தலைவர்கள் இதுவரை சிறிதும் முன்னெடுக்கவில்லை. ஒரு சமூகத்தின் மேன்மைக்கும், தேசிய எழுச்சிக்கும் அறிவியல-கலை-இலக்கிய- பண்பாட்டுப் பணிகள் முதுகெலும்பானவை மட்டுமல்ல தலையாயவையுங்கூட.
மனிதனின் ஆக்கத்திறனை வளர்ப்பதில் அறிவியல்-கலை-இலக்கியம் என்பனவே முன்னணிப் பாத்திரம் வகிக்க வேண்டியவை. தன்னகத்தே இவை தமக்கான ஆக்கத்திறனை வளர்ப்பவை மட்டுமன்றி சமூகத்திலுள்ள அனைத்து அம்சங்களிலும் அவையவற்றிற்கான ஆக்கத்திறனை வளர்பப்திலும் இவற்றின் பணி முக்கியமானது.
இத்துறை சார்ந்து செயற்படுபவர்களை முதலில் ஊக்குவிக்க வேண்டும். காழ்ப்புணர்வும், குழிபறித்தலும், சேற்றைவாரி வீசுதலும் ஒரு நல்ல பண்பாட்டிற்கான அறிகுறிகளாகாது. முள்ளிவாய்க்கால்ப் பல்கலைக்கழகம் தந்திருக்கும் போதனையால் பாடம் கற்றுக் கொள்ளாத ஒருவன் வேறு எதனாலும் பாடங்களைக் கற்கமுடியாது.
தமிழர் என்பதற்கும் அப்பால் முள்ளிய்க்கால் இனப்படுகொலை ஒரு பெரும் மனித அவலம். அது முழு மனிதகுலத்திற்கும் எதிரான செயல் என்ற அணுகுமுறையுடன் அதற்கான மனிதநேயம் தழுவிய பரந்த பண்பாட்டுப் பணிகள் அமைய வேண்டும். முள்ளிவாய்க்கால் மிகவும் கண்டிப்பான ஆணையை தமிழ் மக்களுக்கு இடுகிறது.
முதலில் அநீதிக்கு எதிராக குரல் கொடுங்கள். அதனை நோக்கி உங்கள் கலை-இலக்கிய படைப்புக்களை உருவாக்குங்கள். அதற்கு முன்னோடியாக அதற்கான தகுதியை வெளிப்படுத்தும் வகையில், அதற்கான பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் காழ்ப்புணர்வுகளைக் கடவுங்கள்.
கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவியுங்கள், சேற்றைவாரி பூசாதிருக்கக் கற்றுக் கொள்ளுங்கள், ஊக்குவித்தல் என்ற நோக்கில் நின்று கலை-இலக்கிய-பண்பாட்டுப் பணியில் முதலில் தலைவர்கள் ஈடுபட வேண்டும். தேசியம் என்பது மேடையில் பேசும் அரசியல் மட்டுமல்ல. அது பரநத் பண்பாட்டுத் தளத்தில் உணர்வுபூர்வமான பாத்திரம் வகிப்பதற்குரியது.
மேலும் அரசியற் பண்பாடும் கூடவே வளரவேண்டும். தோல்விக்குப் பொறுப்பேற்கும் அரசியற் பண்பாடும், பாரம்பரியமும் பெரிதாக வளரவேண்டும். தமிழ் அரசியலில் இத்தகைய பண்பாட்டுக்கான பாரம்பரியம் இன்னும் தோன்றவில்லை.
சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் பலகட்டங்களில் பாரிய அரசியல் தோல்விகள் ஏற்பட்டன. எந்தொரு தலைவர்கூட தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகியது கிடையாது. அந்தப் பிழையான பண்பாட்டு அம்சம் முற்றிலும் களையப்பட வேண்டும்.
மொத்தத்தில் அரசியல் – சமூக – கலை – இலக்கியப் பண்பாட்டினை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்க வேண்டும். அனைத்து மாற்றங்களுக்கும், கலை-இலக்கிய-பண்பாட்டுப் பணிகள் திறவுகோல்களாக அமைவதுடன் அவையே சமூக வளர்ச்சிக்கான உருக்கு இரும்பாகவும், தேசிய வளர்ச்சியின் குறிகாட்டிகளாகவும் அமைகின்றன.