குறைந்த விலையில் நெல் கொள்வனவு! மன்னார் விவசாயிகள் பாதிப்பு!
அறிவித்ததைப் போன்று நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபை நெல்லைக் கொள்வனவு செய்யாததால் குறைந்த விலையில் தனியாரிடம் நெல்லை விற்க வேண்டிய நிலையில் மன்னார் மாவட்ட விவசாயிகள் உள்ளனர்.
காலபோக நெற் செய்கையின் அறுவடைகள் முடியும் நிலையில் உள்ளளன. வடக்கு மாகாணத்தில் நெல் சந்தைப் படுத்தும் சபை, கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுடைய நெல்களைக் கொள்வனவு செய்வதாக அந்தந்த மாவட்டச் செயலகங்கள் தெரிவித்தன.
நெல் சந்தைப்படுத்தும் சபையானது வடக்கு மாகாணத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து இந்த பெரும்போகத்தில் 40 ஆயிரத்து 800 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது என்றும், ஒரு கிலோ சம்பா 41 ரூபாவுக்கும், ஒரு கிலோ நாட்டு 38 ரூபாவுக்கும் நெல் கொள்ளவனவு செய்யப்படவுள்ளன என்றும் அதற்காக மாவட்டச் செயலகங்களுக்கு நிதி விடுவிக்கப்பட் டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலில் நெல் கொள்வனவுகள் இடம்பெற்றன. தொடர்ந்தும் ஏனைய மாவட்டங்களில் கொள்வனவு இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தில் இதுவரை எந்த ஒரு விவசாயியிடமிருந்தும் நெல் கொள்வனவு செய்யப்படவில்லை.
மன்னார் மாவட்டத்தில் விவசாய பெருநிலப்பரப்பாக உள்ள நானாட்டான், மாந்தை, முசலி, மடு போன்ற பகுதிகளில் பெரும்போக நெற்செய்கையின் முதல் கட்ட அறுவடைகள் பரவலாக இடம் பெற்று வருகின்றன.
நெல்சந்தைப்படுத்தும் அதிகார சபை நெல் கொள்வனவில் இன்னும் ஈடுபடாத காரணத்தால் தனியார் வியாபாரிகள் சிவப்பு வெள்ளை சம்பா போன்றவற்றை, 2ஆயிரத்து 100 அல்லது 2ஆயிரத்து 200 ரூபாவுக்கும், கீரி சம்பா 3 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் கொள்வனவு செய்துள்ளனர்.
தற்போது அவற்றையும் கொள்வனவு செய்வதை நிறுத்தி விட்டார்கள். இதனால் அறுவடைசெய்த நெல் மூடைகளை வரம்புகளின் மீது அடுக்கி வைத்து காவல்காக்கின்றனர் மன்னார் மாவட்ட விவசாயிகள்.
“விவசாயத்துக்காக பட்ட கடன்கள் அதற்கான வட்டிகள் ஒரு புறம் குடும்பச் செலவு மறுபுறம் எங்களைத் தாக்குகிறது மாதக்கணக்கில் இரவு பகலாகப் பாடுபட்ட விவசாயிகளுக்கு பலன் எதுவும் கிடைப்பதில்லை.
எந்தக் கஷ்டங்களும் அனுபவிக்காத முதலாளி மார் பலனை அனுபவிக்கின்றார்கள். அரசு கூறியது போல் விரைவாக நெல்சந்தைப்படுத்தும் அதிகார சபை மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல்லை நியாய விலைக்கு கொளவனவு செய்து விவசாயிகளை கஷ்டத்திலிருந்து மீட்க வேண்டும் என்று விவசாயிகள் பெருமூச்சுவிட்டனர்.
“மன்னார் மாவட்டத்தில் அறுவடைகள் நிறைவு பெறாததன் காரணத்தாலேயே நெல்சந்தைப்படுத்தும் சபை கொள்வனவில் ஈடுபடவில்லை.
வழமையாக மன்னார் மாவட்டத்தில் இறுதியாகத்தான் கொள்வனவு இடம்பெறும். எதிர்வரும் புதன் கிழமை கண்டியில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று உள்ளது.
அதை அடுத்துத்தான் எப்போது மன்னாரில் கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என்று தெரியவரும் என்று நெல் சந்தைப்படுத்தும் சபையின் கிளிநொச்சிப் பிராந்திய அலுவலகத்தினர் தெரிவித்தனர்.