நடந்த உண்மைகளை மறப்போம் – மீண்டும் வலியுறுத்துகிறார் பிரதமர்!
நடந்த உண்மைகளை மறந்து, மன்னித்து புதிய வழியில் செல்வோமென மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த ரணில், பழையதை மறப்போம் மன்னிப்போம் என கூறியிருந்தார். இக்கருத்து, பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலும் இக்கருத்தை மீண்டும் ரணில் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டுமென்றால், பழைய விடயங்களை மறந்து புதிய பாதையை நோக்கி செல்வதற்கு தமிழ் மக்கள் முன்வர வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அனைத்து இன மக்களும் ஒரே பாதையில் செல்லவேண்டியது அவசியமாகும்.
இதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லையென பொய்யுரைத்தமையால்தான், ஜனாதிபதி பதவியை இழக்க நேரிட்டது. மேலும், யுத்தத்தில் இராணுவத்தினர் மாத்திரம் போர்க்குற்றங்களை புரியவில்லை. விடுதலைப்புலிகளும் போர்க்குற்றம் இழைத்துள்ளனர்.
ஆகையால், இவைகளை பற்றியே எந்நாளும் கூறிக்கொண்டு இருப்பதை விடுத்து நாட்டின் எதிர்காலத்தை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்காக பழையவற்றை மறந்து புதிய பாதையை நோக்கி செல்வோம்” என ரணில் குறித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.