யாழில் இருந்து அவுஸ்திரேலியா, ஐரோப்பா வரை விஸ்தரிக்கப்படும் விமான சேவை!


யாழில் இருந்து அவுஸ்திரேலியா, ஐரோப்பா வரை விஸ்தரிக்கப்படும் விமான சேவை!

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் நவீனமயப்படுத்தும் செயற்றிட்டம் இவ்வருட நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏ320 மற்றும் ஏ321 ரக விமானங்கள் இறங்கும் வகையில் 3,500 மீற்றரில் ஓடு பாதையை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் நவீன மயப்படுத்தும் செயற்திட்டத்திற்காக 20 பில்லியன் ரூபாவை செலவிட மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது பலாலி விமான நிலையத்தை நவீனமயப் படுத்துவதற்கான விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

அமைச்சர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் விமான சேவை அதிகார சபை மற்றும் விமானப்படை அதிகாரிகளும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர்.

இதற்கிணங்க பலாலியிலிருந்து 7200 கிலோமீற்றர் தூரத்திற்கு நேரடி விமான சேவைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்தியா, அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நேரடி விமான சேவைகளை நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இதன்மூலம் வடமாகாண மக்கள் பல்வேறு வசதிகளைப் பெற்றுக்கொள்வதுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட பணிப்புரைகளை வழங்கியுள்ளார். மேற்படி செயற்திட்டத்தின் ஆரம்பகட்டமாக ஓடு பாதையை நிர்மாணிக்குமாறும் வெளிச் செல்லல் மற்றும் உட்செல்லும் இறங்கு துறைக்கான கட்டடம் மற்றும் அதனோடு இணைந்த தற்காலிக கட்டடங்கள் ஆகியவை நிர்மாணிக்கப்படவுள்ளன.

உலகின் அதிகளவு நாடுகள் இத்தகைய தற்காலிக கட்டடங்களை உபயோகித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரயாணிகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் விரிவுபடுத்தப்படும் போது, இரண்டாம் கட்டமாக நிரந்தர கட்டடங்களை நிர்மாணிக்க முடியுமென்றும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

விமான நிலைய தேவைகளுக்கு அவசியமான நீர் மற்றும் மின்சார வசதிகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் வீதிகளை நிர்மாணித்தல் தொடர்பிலும் எரிபொருளை களஞ்சியப்படுத்துதல் தொடர்பிலும் மேற்படி பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net