மனித புதைகுழியின் மர்மம் – உண்மைகள் வெளியீடு?
மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த அறிக்கை இன்று (புதன்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரையில் 320 மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் தெரிவு செய்யப்பட்ட ஆறு எழும்புக்கூடுகளின் மாதிரிகள், பரிசோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்துக்கு கடந்த மாதம் 25 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டது.
பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில், 5 மனித எச்சங்களின் கார்பன் அறிக்கையை கடந்த 16 ஆம் திகதி சமிந்த ராஜபக்ஷ, பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், குறித்த கார்பன் பரிசோதனை அறிக்கை இன்று மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி குறித்த அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்பதோடு, அறிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
குறித்த அறிக்கை முடிவுகளின் மூலம், எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்ட காலப்பகுதி தொடர்பான இரகசியம் வெளியான பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.