இலங்கை அச்சு ஊடகத் துறையின் முன்னோடி டி.ஆர். விஜேவர்தன
133ஆவது ஜனன தினம்
இலங்கையின் அச்சு ஊடகத்துறையை ஒழுங்கமைத்த முன்னோடியும், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான அமரர் டி.ஆர். விஜேவர்தனவின் 133ஆவது ஜனன தினம் நாளைமறுதினம் ஆகும்
சமூக, பொருளாதார, அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் அளப்பரிய பங்களிப்பை நல்கி வருகின்ற ஊடகங்கள் 21 ஆம் நூற்றாண்டில் உலகையே ஆளும் சக்தியாக மாறியுள்ளன. ஊடகத்தை தம் வசம் கொண்டிருப்பவர்தான் பலவான் என நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.
இவ்வாறு முக்கியத்துவம் பெற்று விளங்கும் ஊடகத்தின் சக்தியையையும் பலத்தையும் இற்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அறிந்து தெரிந்து செயற்பட்ட இலங்கையர் டி.ஆர்.விஜேவர்தன ஆவார். இலங்கை பிரித்தானிய ஏகாதிபத்திய நாடாக விளங்கிய போதிலும், இந்நாட்டில் அச்சு ஊடகத்துறை ஊடாக அவர் முன்னெடுத்த நடவடிக்கைகள் நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் பாரிய முன்னேற்றங்களுக்கு அடித்தளமிட்டதோடு நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும் முக்கிய பங்காற்றின.
அச்சு ஊடகங்களைப் பயன்படுத்தி நாட்டின் சமூக. பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்கு இவர் அளித்துள்ள பங்களிப்பை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. அன்று அவர் இட்ட அடித்தளம் இன்றும் செல்வாக்கு செலுத்துவதாக விளங்குவதோடல்லாமல் இந்நாட்டு வரலாற்றில் அவருக்கு தனியொரு இடத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
1886ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி கொழும்பு முகத்துவாரத்தில் செல்வந்த குடும்பத்தில் பிறந்த டி.ஆர் விஜேவர்தன, ஆரம்பக் கல்வியை உள்நாட்டிலும் உயர்கல்வியை பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையிலும் நிறைவு செய்தார். கல்வியை நிறைவு செய்து கொண்டு தாயகம் திரும்பிய டி.ஆர் விஜேவர்தன புதுக்கடை நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகப் பொதுவாழ்வை ஆரம்பித்தார்.என்றாலும் பொது சேவையிலும், அரசியலிலும்தான் அவர் அதிக ஆர்வம் காட்டினார்.
இவ்வாறான சூழலில் இந்நாட்டின் சுதந்திரத்திற்கு உழைப்பதற்காக தோற்றம் பெற்ற இலங்கை தேசிய சங்கத்தின் செயலாளராக 1913 இல் இவர் நியமனம் பெற்றார். இந்நாட்டில் தேசிய இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு அச்சு ஊடகமான பத்திரிகையின் தேவையையும் அவசியத்தையும் டி.ஆர். விஜேவர்தன அப்போது உணர்ந்தார்.
இது அவரில் திடீரென ஏற்பட்ட உணர்வு அல்ல. மாறாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த இவருக்கு இங்கிலாந்தில் சட்டத்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆங்கிலேயரான எப்.எச்.எம். ஹேர்பட் என்றொரு நண்பர் இருந்தார். அவர் விஜேவர்தனவுடன் மிகவும் அன்பாகவும் நெருக்கமாகவும் பழகினார். அவருக்கு பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நண்பர்கள் இருந்தனர். அவர்களது அறிமுகமும் விஜேவர்தனவுக்கு கிடைத்தது.
அதேநேரம் ஹேர்பட்டின் தோழமையின் பயனாகவே விஜேவர்தனவுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. அத்தோடு ஹேர்பட் பத்திரிகையின் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் விஜேவர்தனவுக்கு ஊட்டினார். அதாவது மக்கள் மத்தியில் கருத்தொன்றை விதைப்பதற்கும் அதனை ஆழ அகலமாகக் கட்டியெழுப்புவதற்கும் பத்திரிகைக்கு ஈடாக எதுவும் இல்லை என்ற எண்ணத்தை விஜேவர்தனவில் ஹேர்பட் ஏற்படுத்தினார்.
அதேநேரம் பிரித்தானியாவில் கல்வி பயின்று கொண்டிருந்த இவர், இலங்கையின் சுதந்திரத்திற்காக உழைத்த தலைவர்களுடன் தொடர்புகளைப் பேணியபடி பிரித்தானிய மக்கள் பிரதிநிதிகள் சபையில் அதன் பிரதிநிதிகளையும் அதிதிகளையும் சந்தித்து இலங்கைக்கு அதிக சுதந்திரத்துடன் கூடிய ஜனநாயக ஆட்சி முறையைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டமை தெரிந்ததே.
இவ்வாறான பின்புலத்தில் ஊடகத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டிருந்த அமரர் டி.ஆர். விஜேவர்தன தேசிய இயக்கத்தின் செயலாளராக நியமனம் பெற்றதும் அதன் தேவையை பெரிதும் உணர்ந்தார். இதனடிப்படையில் அவர் ‘சிலோனிஸ்’ என்ற பத்திரிகையை முதலில் வாங்கினார். அத்தோடு 1909 இல் எச்.எஸ். பெரேராவினால் ஆரம்பிக்கப்பட்டு அவர் நோய் வாய்ப்பட்டதால் தொடர்ந்து வெளியிட முடியாத நிலைக்கு உள்ளான ‘தினமின’ பத்திரிகையையும் 1914 இல் டி.ஆர். விஜேவர்தன வாங்கினார். அதுவரைக்கும் இப்பத்திரிகை ஆர்ம்பிக்கப்பட்டது முதல் டெப்லொயிட் சஞ்சிகை அளவில்தான் வெளிவந்தது.
டி.ஆர். விஜேவர்ன தன் சகோதரர் ஒருவருடன் இணைந்து புறக்கோட்டை நொரிஸ் வீதியில் தனியொரு கட்டடத்தில் அலுவலகமொன்றை ஆரம்பித்து தினமின பத்திரிகையை பெரிய அளவில் சிறந்த வடிவமைப்புடன் வெளியிடத் தொடங்கினார். இப்பத்திரிகை தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லபிராயத்தைக் கட்டியெழுப்புவதில் முழுக்கவனத்தையும் செலுத்திய விஜேவர்தனவுக்கு சேர். டி.பி. ஜயதிலக்க பக்கத்துணையாக இருந்தார். பத்திரிகைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற்றது.
இவ்வாறான நிலையில், 1918 இல் எப். ஏ மார்ட்டினஸ் என்பவரை ஆசிரியராகக் கொண்டு ‘டெய்லி நியூஸ்’ என்ற ஆங்கில மொழிப் பத்திரிகையையும் இவர் ஆரம்பித்தார். இப்பத்திரிகை ஊடாக நாட்டுக்கு சிறந்த சேவையாற்ற முடியும் என்ற நம்பிக்கை விஜேவர்தனவிடமும் அன்றைய புத்திஜீவிகளிடமும், சமூக ஆர்வலர்களிடமும் காணப்பட்டது. அத்தோடு அன்றைய அரசியல் யாப்பு சீர்திருத்த இயக்கத்தின் முன்னணியாளர்களில் ஒருவராக விளங்கிய பொன்னம்பலம் அருணாசலம் இப்பத்திரிகையை தரம் மிக்கதாகவும் சிறந்த முறையிலும் கொண்டு நடாத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
அதாவது டி.ஆர். விஜேவர்தன கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது இவ்வாறான பத்திரிகையின் அவசியத்தை உணர்ந்தார். ஏனென்றால் தமது சுதந்திர வேட்கையையும் உணர்வுகளையும் ஆங்கிலேயருக்கு அவர்களது மொழியிலேயே கொண்டு செல்வதே அவரது நோக்கமாக இருந்தது.
அந்த அடிப்படையில் இந்நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதையும் சுதந்திர வேட்கையை மக்கள் மத்தியில் விதைப்பதையும் நோக்கமாகக் கொண்டு ‘தினமின’ பத்திரிகை வெளிவந்த அதேசமயம், இந்நாட்டு மக்களின் சுதந்திர வேட்கையையும் உணர்வுகளையும் ஆங்கிலேயருக்கு கொண்டு செல்லவென ஆங்கிலப் பத்திரிகையையும் இவர் ஆரம்பித்தார்.
இப்பத்திரிகைகள் தம் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கப் பெற்றது. இவ்வாறான சூழலில் ஐரோப்பிய கம்பனியொன்றுக்கு சொந்தமாக இருந்த ‘சிலோன் ஒப்சேவர்’ பத்திரிகையை 1923 இல் இவர் வாங்கினார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தினமின மற்றும் டெய்லி நியூஸ் பத்திரிகைகளை அடிப்படையாகக் கொண்டு அசோசியேட்டட் நியூஸ்பேப்பர் ஒப் சிலோன் லிமிட்டட் என்ற லேக் ஹவுஸ் நிறுவனத்தை 1926 இல் உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து 1930 இல் ‘சிலுமின’ பத்திரிகையையும் ஆரம்பித்தார். இதுவே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஞாயிறு பத்திரிகையாகும்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் சுதந்திரப் போராட்டம் மற்றும் சமூக, பொருளாதார, அரசியல் விழிப்புணர்ச்சிகளுக்கான நடவடிக்கைகளை தமிழ் பேசும் மக்களுக்கும் கொண்டு செல்ல ஒரு ஏற்பாடும் இல்லாதிருந்தது. இதனை அவதானித்த டி.ஆர். விஜேவர்தன 1932 இல் ‘தினகரன்’ பத்திரிகையை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்த சொற்ப காலத்தில் தினகரன் ஞாயிறு பத்திரிகையையும் அவர் தொடங்கினார்.
அந்த வகையில் இலங்கை வரலாற்றில் மூன்று மொழிகளிலும் ஆறு பத்திரிகைளை வெளியிட்ட முதலாவது முக்கியஸ்தர் என்ற பெருமையை டி. ஆர் விஜேவர்தன பெற்றுக் கொண்டார்.
அச்சு பத்திரிகை ஊடகத் துறை தொடர்பில் டி.ஆர். விஜேவர்தன பெற்றிருந்த அறிவு, அனுபவம், செயல் திறன் மற்றும் நிபுணத்துவம் என்பன குறித்து முன்னணி எழுத்தாளரான மார்டின் விக்கிரமசிங்க தமது நூலொன்றிலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அச்சு ஊடகத்துறையில் ஒழுங்குமுறையான பத்திரிகைக் கட்டமைப்பை உருவாக்கியவர் டி.ஆர். விஜேவர்தன ஆவார். அத்தோடு ஒழுங்குமுறையான பத்திரிகை நிறுவனமொன்றுக்கான கட்டமைப்பையும் அவர்தான் தொடக்கி வைத்தார். பத்திரிகையொன்றை சிறந்த முறையில் கொண்டு நடத்தவென விளம்பரங்களை பெறும் திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
அதேநேரம் பத்திரிகை நிறுவனமொன்றுக்கு ஒழுங்குமுறையான முகாமைத்துவம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக பத்திரிகை ஆசிரியர்களை நியமித்தல், ஊடகவியலாளர்களையும், எழுத்தாளர்களையும் சேர்த்துக் கொள்ளல், புகைப்படங்களை பெற்றுக் கொள்ளுதல், அவற்றைப் பிரசுரித்தல், பக்க வடிவமைப்பு, வெளியீடு என்பவற்றில் உயர் தரத்தைப் பேணல், விளம்பரங்களின் மூலம் பத்திரிகைக்கு தேவையான நிதி உறுதிப்பாட்டைப் பேணல், பத்திரிகை விநியோகத்தை செயற்றிறனுடன் சீராக மேற்கொள்ளல் உள்ளிட்ட அனைத்து வ டயங்களிலும் கவனம் செலுத்தக்கூடியவராகவே விளங்கினார் அமரர் டி.ஆர். விஜேவர்தன.
அதேவேளை தமது பத்திரிகைகளில் கடமையாற்றும் பத்திரிகை ஆசிரியர்கள் சுதந்திரமாகப் பணியாற்ற இடமளித்த இவர் தமது சமூக, பொருளாதார. அரசியல் கருத்துக்களுடன் அவர்கள் முரண்படவும் இடம் வைக்கவில்லை.இலங்கை அச்சு ஊடகத்துறையின் முன்னோடியாக விளங்கும் டி. ஆர். விஜேவர்தன இந்நாட்டின் தேசிய வீரர்களில் ஒருவராகவும் விளங்குகின்றார்.
இவ்வாறு அச்சு ஊடகத் துறையின் மேம்பாட்டுக்காக வாழ்க்கையின் முழு நேரத்தையும் செலவிட்டு வந்த இவர், தனது 64 வது வயதில் 1950 ஆம் ஆண்டில் காலமானார். இவர் இந்நாட்டு அச்சு ஊடகத்துறை மேம்பாட்டு அளித்துள்ள பங்களிப்புக்கள் இந்நாட்டு வரலாற்றில் அழியாத்தடம் பதித்துள்ளன என்றால் அது மிகையாகாது.