கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்!
இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, தான் தயாரித்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தியதாலேயே குற்றங்கள் இழைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றம் இடம்பெற்றதாக கூறப்பட்டு வருகின்றமை குறித்து நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இறுதி யுத்தத்தில் இராணுவத்தின் பிரதான தளபதியாக நான் இருந்தேன். இதன்போது போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதற்காக கோட்டாபய நிகழ்ச்சி நிரலொன்றினை தயாரித்தார்.
அதற்கு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அனுமதி வழங்கியிருந்தார். ஆனால், நான் எனது சுயபுத்தியில் செயற்பட்டே யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தேன்.
மேலும் யுத்தம் நிறைவடையும் நேரத்தில் கோட்டாபய, தனது நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தியதால், சில குற்றங்கள் இடம்பெற்றதாக தகவல் கிடைக்கப்பெற்றது.
ஆகையால், யுத்தக் குற்றத்தில் அனைத்து இராணுவ வீரர்களும் ஈடுபடவில்லை.
இதனால் சர்வதேசத்தின் மத்தியின் இலங்கைக்கு களங்கம் ஏற்படக் கூடாதென்றால், யுத்தம் குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.